Wednesday, February 3, 2016

இறுதிச்சுற்று


ஒரு கதை எழுதப்படும் போதே அதன் கிளைமாக்ஸ் எல்லா விதமான கதையின் போக்கிற்கும் கதாபாத்திரங்களின் நிகழ்வுகளுக்கும் முடிவாய் கூறி நிறைவு படுத்தவேண்டும். அதுபோல் இந்த படத்தில் இருக்கும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் ஒரு குத்துச்சண்டை இறுதிச்சுற்று விடையளித்தால் எப்படி இருக்கும் அது இந்த திரைபடத்தின் வெற்றியே. அதனால் தான் தலைப்பும் இறுதிச்சுற்று என்று வைத்து விருந்து படைத்திருக்கிறார் சுதா கோங்கரா.



பெண்கள் குத்துச்சண்டை கதை என்பதால் மட்டுமல்லாமல் எல்லா விளையாட்டு துறையிலும் நடக்கும் உட்கட்ட உச்சகட்ட அரசியலை தோலுரித்து தான் காட்டுகிறது அதுவும் கதை நகரும் வேகத்திலயே. குத்துச்சண்டை தெரிந்த பெண்ணையே நடிகையாக்கியத்தில் இருந்தே இயக்குனரின் வெற்றி ஆரம்பித்து விட்டது. புதுமுக நடிகை ரித்திகா சிங்க் நடிப்பு பல படங்கள் நடித்தும் பலருக்கு வராத நடிப்பு. எந்த ஒரு இடத்திலும் மதி கதாபாத்திரத்தை விட்டு விலகவே இல்லை. சிறப்பான எதிர்காலம் இருக்கிறது நடிகைக்கு.

சந்தோஷ் நாராயணன் இசை பல இடங்களில் ஒரு ஹாலிவுட் தரத்தில் நடக்கும் பின்னணி இசையென ஒலித்தது. அதிலும் எய் சண்டைகாரா பாடல் இடையில் வரும் புல்லாங்குழல் ஓசை அல்ல இசை அதன் புல்லங்குழல் ஓட்டை வழியே வரும் இசையை ஸ்லோ மோஷனில் இசையே  வெளிவருவதாய் உணரமுடிகிறது. எந்த ஒரு பாடலும் கதையை தாண்டி செல்லவில்லை.

ஒரு திரைபடத்தில் எத்தனை துனைக்கதைகள் இருக்கவேண்டும் அவை எல்லாம் படத்தில் ஒன்றாகி இருந்ததால் தான் திரைக்கதை சிறப்பாக அமைந்துள்ளது. இதில் மாதவன் மற்றும் ராஜ்குமார் ஹிரானி உதவி திரைக்கதை எத்தனை  பலம் சேர்த்திருக்கவேண்டுமோ அனைத்தையும் செய்து முடிக்கிறது. உதாரணமாக தாய் தந்தை மகள்கள் கதை,ஜூனியர் கோச் கதை,ஹீரோ வில்லன் கதை,ஹீரோ முன் கதை,ஹீரோ ராதாரவிக் கதை, ஹீரோ கோச் கதை, ஹீரோ கெட்டவன் கதை இப்படி படம் முழுக்க குட்டி குட்டி கதைகள் எல்லாம் ஒன்று சேர்ந்தது தான் இந்த திரைப்படம்.

மாதவன் தோளில் சுமந்து இந்த படத்தை தந்தார் என்பதற்கு ஒரே ஒரு காட்சியில் தான் சட்டையை கழற்றி குத்துசண்டை செய்வது போல் வரும் ஆனால் அந்த காட்சிக்கான அழுத்தம் அதிகம். அதற்கே ரெண்டு வருடம் குத்துசண்டை பயின்று உடம்பை ஏற்றி வைத்திருக்கிறார். படம் முழுக்க ஒரு கோச் என்பதை கோவம் கண்ணீர் இறக்கம் விட்டுகொடுத்தல் போன்ற காட்சிகளை அனாசியமாக நடித்து மனதில் நிறைகிறார்.

படத்தில் முக்கியமான இடத்தில் மாஸ்டர் உங்களுக்கு inspiration யார் என்ற கேள்விக்கு ஜெங்கிஸ் கான் என்ற சாம்ராட்டை கூறுவார் மாதவன். அதற்க்கு அவர் குத்துச்சண்டை வீரர் இல்லையே என கேள்வி எழுப்புவர் அதற்க்கு மாதவன் இது புரிஞ்ச அன்னிக்கி நீ முழு நேர குத்துச்சண்டை வீரராக மாறிடுவ என்பார். அது புரிஞ்சா இந்த படமும் புரியும்.

இறுதிச்சுற்று முடிவின் நிறைவோடு,
ப.இரசல் 

Wednesday, December 30, 2015

பசங்க 2 - ஹைக்கூ

குழந்தைகள் படம் எடுக்க இப்போதைக்கு பாண்டியராஜ் தவிர்த்து யாரும் இல்லை. தமிழில் ஒரு தாரே சமீன் பர் இந்த பசங்க அதற்காக ரீமேக் என்று எடுத்துக்கொள்ள வேண்டாம். அந்த படத்துக்கும் இந்த படத்துக்கும் ஆயிரம் வித்தியாசங்களாவது உண்டு.பல இடங்களில் வரும் வசனங்கள் எதார்த்தமானது. சூர்யா - அமலா பால் நடிப்பும் இயல்பானது. ஆனால் மனதில் தோன்றியது சூர்யா-ஜோதிகா நடித்திருந்தால் எதார்த்தமான ஒரு ஜோடியாக இருந்திருக்கும்.

குழ்ந்தைகள் அற்புதமானவர்கள் அவர்களின் திரைப்படங்களும் சுவாரசியமானது அதை நாம் தான் ஆதரிக்க வேண்டும். மெல்லிய பொழுதுபோக்கு மற்றும் வலுவான கருத்து இதை விமர்சனமாய் எழுதுவதை விட பார்த்து புரிந்து கொள்வதே மேல். பாண்டியராஜ்க்கும் சூர்யாவுக்கும் 2015 ஆம் ஆண்டை இனிதே முடித்து வைத்ததற்கு நன்றி.

படம் பார்த்து விட்டு வெளியே வரும் போது சில சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் கண்ணீர் விட்டவாரே சென்றனர், அவர்கள் ஒரு கடவுளின் குழந்தைகள் ஆசிரமத்தில் இருந்து ஒரு தொண்டு நிறுவனத்தால் படத்திற்கு அழைத்து வரபட்டிருக்கின்றனர். படத்தின் உருக்கத்தின் இருந்த எங்களை நெகிழ்ச்சி அடைய செய்தது அந்த காட்சி. இது அனைவருக்குமான படம் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும்.

நன்றியுடன்,
ப.இரசல் 

Sunday, December 27, 2015

பூலோகம்

இந்த வருடம் கடைசியில் வந்தாலும் வரவேற்ப்பு சும்மா அள்ளுது. ஒரே காரணம் ஜனநாதன் அவர்களின் வசனம் என்ற காரணத்தோடு உள்ளே சென்றால். ஜெயம் ரவி ஆளே மாறி இருக்கார் படத்துக்கு. வெறும் உடல் பருமனை ஏற்றுவது மட்டுமல்லாமல் டான்சிங் பூலோகம் என்ற பேருக்கு ஏற்றார் போல் ஆங்கங்கே நடனம் ஆடுவதும், படம் நெடுக குத்து சண்டை வீரராக வருவது உண்மையில் அவரின் மென கெடல் புரிகிறது. 

படம் பார்த்துவிட்டு தான் தெரிந்தது இதில் ஸ்ரீகாந்த் தேவா இசை என்று. இசையும் பின்னணியும் படத்திற்கு பலம். முதல் பாதி விறுவிறுப்பு என்றால் இரண்டாம் பாதி கருத்துக்களம். முதல் பட இயக்குனர் என்ற அடையாளமே இல்லாமல் உள்ளார் இயக்குனர் கல்யாணகிருஷ்ணன். மிக விறுவிறுப்பான கதைக்களம் கொண்டு நேர்த்தியான நெறியாடல். பாராட்டுக்கள்.

மக்களுக்கு இதை தான் கொண்டு சேர்க்க வேண்டுமென்று ஊடங்கங்கள் நினைத்தால் நமக்கு கிடைக்கும் செய்தி என்றுமே அரை வேக்காடு இல்லை ஒன்றுமே அப்படி நடக்கவில்லை என்பது தான். இந்த வருடம் தனிஒருவன் படமும் சரி பூலோகம் படமும் சரி ஒரே கருத்தை வெவ்வேறு கோணத்தில் கூறுகிறது. சபாஷ் என்று சொல்ல தெரிந்த நமக்கே ஊடங்கங்களை எதிர்த்து போரிட தெரியவில்லை.

உதாரணம் கூறவே முடியாத ம(றை)றக்கப்பட்ட செய்திகளை காட்டி தினம் நம்மை வீணடிக்கும் ஊடகத்திற்கு எதிராக மாற வேண்டியம் தருணம் இது என்பதை ஒருக்கணம் படம் பார்க்கும் போது ஏற்ப்பட்ட பாதிப்பு தான் படத்தின் வெற்றி.

வாழ்க பாரதம்,
ப. இரசல்

Saturday, July 11, 2015

பாகுபலி

பாகுபலி
அனைவருக்கும் தெரிந்த ராஜா கதை தான் ஆனால் 2015 ல் அதை பார்க்க ஏன் இந்த கூட்டம் அதான் ஒரு இயக்குனரின் வெற்றி. ராஜமௌளியின் பல திரைபடங்கள் ரீமேக் செய்யப்பட்டு வெளிவந்த நேரம், மகதீரா போன்ற ஒரு படம் மீண்டும் மறுபதிப்பு செய்யமுடியாமல் டப்பிங் மட்டும் செய்யப்பட்டு வெற்றி அடைந்த தைரியம் தான், நான் ஈ திரைப்படம் தமிழில் தெலுகு மற்றும் பிற மொழிகளில்  வெற்றி பெற்றது. 



அப்படி இருக்க பாகுபலி எப்படி இருக்கிறது என்று கூற அனைவருமே இரண்டாம் பகுதி வரும் வரை காத்திருக்க வேண்டும். ஏனென்றால் முதல் பகுதி கதையின் துவக்கம் மட்டுமே. சரி முதல் பகுதி எப்படி இருக்கிறது என்றால் இடைவேளைக்கு பிறகு வரும் அழுத்தமான கதையின் நெறியாடல் பார்த்த அனைவரையும் அடுத்த பகுதிக்காக காத்திருக்க வைத்துவிட்டது.

இப்படி ஒரு போர்கள காட்சி இப்படி பிரமாண்டமான கோட்டை இப்படி பிரமாண்டமான அழுத்தமான கதாபாத்திரங்கள் எல்லாம் சபாஷ் பேஷ் பலே. 

சத்யராஜ் என்னை பொறுத்தவரை இந்த பகுதியின் கைதட்டல்களை வெகுவாரியாக பெறுகிறார். என்ன ஒரு நடிப்பு திறமை அந்த நடிகனுக்குள். அடுத்து ரம்யா கிருஷ்ணன் அலட்டல் இல்லா நடிப்பு மிகவும் ஈர்க்கிறது. நாசர் போர்கள காட்சியில் கொடுக்கும் விதவிதமான முக பாவங்கள் அடடே அற்புதம். 

முக்கிய கதாபத்திரங்களை பற்றி திரையில் கண்டு கொள்ளுங்கள். அடுத்த பகுதி மிகவும் அழுத்தமாகவும் அற்புதமாகவும் இருக்க போகிறது, அப்பொழுது முன் பகுதியை விட்டுவிட்டோமே என்று தோன்ற கூடாது என்றால் திரையரங்கில் இந்த திரைபடத்தை கண்டுகளியுங்கள்.

பாகுபலி - தொடக்கம் - தொடரும் 

என்றும் அன்புடன்,
ப.இரசல் 

Sunday, June 7, 2015

காக்காமுட்டை - தேசியவிருது பெற்ற படம்

காக்காமுட்டை - தேசியவிருது பெற்ற படம் 



இவ்ளோ தான் நமக்கு தெரிஞ்சதுன்னு படத்த போய் பார்த்தா குப்பத்தில் இருக்கும் மக்களின் வாழ்க்கையை எட்டிப் பார்த்தது போல படம் நகர்கிறது.
என்னடா குப்பத்து வாழ்க்கைய இது வரைக்கும் காட்டாத ஒன்னையா காட்டிடாங்க அப்படின்னு கேட்டா? ஆமா உண்மைதான் அப்படிதான் மொத்த படமும் இருக்கு. வெறும் பாஷையை மட்டும் அல்ல உடல் மொழியும்.

கடைசிவரைக்கும் குட்டிபசங்களை சின்ன காக்காமுட்டை பெரிய காக்காமுட்டைன்னு தான் ஞாபகம் இருக்கு. எதார்த்தம் மாறாத அம்மா கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா , பொண்ணுகிட்ட விஷயம் இருக்கு. ஆனா இந்த குட்டி பசங்களுக்கு இது தான் முதல் படம், எப்படிப்பா நீங்க நடிசீங்கன்னு சொல்றது. அப்படியே இருக்கீங்களே தம்பிகளா. உங்ககிட்ட கத்துக்கணும்னு நினைக்கிறேன்.

ஊரே படத்த கொண்டாடுது அதான் தமிழ் ரசிகர்கள். புடிச்சா கொண்டாடுவாங்க. இயக்குனர் மணிகண்டன் சிகரம் தொடுவார் என்ற அச்சமில்லை. இடியென இறங்கும் உண்மையின் வலி நெஞ்சத்தை கேள்வி கேட்க வைக்கிறது அதான் உண்மை சினிமா. பாலுமகேந்திராவும் பாலச்சந்தரும் இருந்திருந்தால் என்ன கூறி இருப்பார்கள் என்று யோசிக்கிறேன். நிச்சயம் கட்டிப்புடித்து பாராட்டி இருப்பார்கள் இயக்குனரை. அதனால் தான் என்னவோ பாரதிராஜா தேசியவிருது தேர்வாளர்களில் ஒருவராய் இருந்துள்ளார்.

pizza சாப்பிடனும்னு தோனுச்சினா இந்த படம் கண்டிப்பா ஞாபகம் வரும் ஒவ்வொரு தடவையும்.

என்றும் அன்புடன்,
ப.இரசல் 

Monday, May 18, 2015

புறம்போக்கு எனும் பொதுவுடைமை - என் பார்வையில்



ஆழ்ந்த சிந்தனைகளுக்கு பிறகு சில தெரிய வேண்டியவற்றை ஓரளவேனும் புரிந்த பின்எழுத ஆரம்பிக்கிறேன். திருவள்ளுவர் பொதுவுடைமை(communism) பற்றி எழுதி இருப்பாராஎன்று ஒரு கேள்வி எழுந்தது அதற்க்கான தேடுதலில் கிடைத்த குறள்

அதிகாரம்: கொல்லாமை குறள்:322
"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை"

Macaulay வகுத்த IPC(Indian Penal code) மூலம் இந்திய அரசாங்கம் குற்றவாளிகளுக்குதண்டனைகள் இன்றும் கொடுத்து வருகிறது. அப்படி குற்றவாளிகளுக்கு கண்டிப்புடன் தண்டனைகள் வழங்க வேண்டுமென நினைத்த Macaulay தான் காவல் துறை அதிகாரியாகவரும் ஷ்யாம்'ன் பெயர். இதனால் கதாபாத்திரத்தின் செயல்கள் கண்டிப்பாகவும் கடமை உணர்வுடனும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஷ்யாமின் நடிப்பு திறமை இந்த கதாபாத்திரத்தின் மூலம் மெருகேறி உள்ளது.

பாலு என்கிற கதாபாத்திரத்தில் ஆர்யா. மக்களுக்காக ஆயுதம் ஏந்திய போராளி. இந்தியாவிற்கு வெளிநாட்டில் இருந்து வரும் குப்பைகளை அனுமதிக்க கூடாது என்ற பிரச்சரரம் பாராளுமன்றத்தில் எதிரொலிக்க இந்திய ரானுவத்திர்க்கே மனித வெடிகுண்டாய் மாறிய போராளியின் கதாபத்திரம் இந்த பாலு. சமிபத்தில் படித்த ஒரு சில செய்திகள் தான் ஞாபகம் வந்தன அயல்நாட்டு குப்பைகளை கொண்டு வந்து அழித்திட இந்தியா என்ன குப்பை தொட்டியா? ஆனால் மக்களுக்காக போராடுபவன் போராளி அவன் அழிந்தால் தான் மக்களுக்கே நிம்மதி என தூக்கு தண்டனை விதிக்க பட்ட குற்றவாளி இந்தபாலு. ஆர்யாவின் நடிப்பு திறமையில் சந்தேகமே இல்லை அர்ப்பணித்து நடித்திருக்கிறார்.

எமலிங்கம் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி, கொலை செய்பவன் கொலையாளி அப்படியென்றால் தூக்கு தண்டனையை நிரவேற்றுபவன் கொலையாளி தானே. இப்படிஒரு கதாபாத்திரம் இது வரை திரைப்படங்களில் காட்டப்படாதவை. அதுவும் ஒருகுற்றவாளி முகத்தை மூடும் போது என்னை யாருமே நம்பவில்லை நீயாவது நம்பு நான் நிரபராதி என்று கூரியவனையே தூக்கிலிடும் துயரம் சொல்லமுடியாதது. அந்த கதாபாத்திரத்தை விஜய் சேதுபதியை தவிர வேறு எவராலும் நிறைவாய் தந்திருக்கமுடியாது. உண்மையில் ஷ்யாமையும் ஆர்யாவையும் விட ஒரு படி மேலே நடித்திருக்கிறார்.

எஸ் பி ஜனநாதன் communism பற்றி இதற்க்கு முன் ஈ மற்றும் பேராண்மையில் நன்றாகவேகூறி இருப்பார். அதே பாணியில் இந்த படமும் இருக்கிறது ஆனால் சிறு தடையாக முதல்மூன்று பாடல்கள் நெருடலாய் போனது. பின் பாதியில் முழுமையாய் பார்ப்பவர் மனதில்அழுத்தம் திருத்தமாக தனியுடமை விட பொதுவுடைமை பற்றி கருத்துகளை பதிவிறக்கம்செய்கிறார். சிறைசாலையில் நகரும் கதையில் முன்புவந்த படங்களை போல் அல்லாமல் ஒவ்வொரு காட்சிகளும் அளந்து எடுக்கபட்டுள்ளன. அதிலும் ஒரு இடத்தில் தவறு செய்தான் என்று தான் தண்டனை கொடுத்து சிறையில் அடைக்கிறோம், அங்கும் துன்புறுத்தல் நடந்தால் அது தவறு என்று ஆர்யா ஜெனிவா ஒப்பந்தத்தை சுட்டி காட்ட அதற்க்கு ஷ்யாம் துன்புறுத்த கூடாது என்று தான் இருக்கிறது ஆனால் தண்டனை கொடுக்கலாம் என்று இருட்டறையில் சாப்பாடு இல்லாமல் அடைக்க உத்தரவிடும் இடம் யோசிக்க வைக்கிறது. ஏனென்றால் அந்த கைதி எட்டாவது முறையாக தப்பிக்க முயற்சி செய்ததால் கசையடி கொடுத்து கொண்டிருந்த போது நடந்த உரையாடல் அது. இப்படியாக படம் நெடுக சிறை அரசியல் மற்றும் தவறுகளின் சுட்டிக்காட்டுதல்கள். கார்த்திகா நாயர் போராளியாக நடித்திருந்தாலும் இந்த படத்திற்கு ஏற்றவாறு உள்ள கதாபாத்திரமாக தெரியவில்லை. பெண் போராளி இன்னும் கூட அர்த்தமுள்ளவராக இருக்க வேண்டுமென்பது என் கருத்து.

கலங்கிய நெஞ்சத்துடன் திரைஅரங்கை விட்டு வெளியே வந்த எனக்கு இந்த திரைப்படமும் பேசப்படவேண்டும் என்பது என் கருத்து.

பொதுவுடைமை பற்றி மேலே கூறிய குரலின் அர்த்தத்தையே வைத்து இந்ததிரைபடத்தின் பார்வையை முடிக்கிறேன்.

உரை:
இருப்போர் இல்லாதோர் என்றில்லாமல், கிடைத்ததைப் பகிர்ந்து கொண்டு, எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்ற சமநிலைக் கொள்கைக்கு ஈ.டானது வேறு எதுவுமேஇல்லை.

என்றும் அன்புடன்,
ப.இரசல்

ஓகே கண்மணி - என் பார்வையில்

ஒரு முறை என்னுடைய whatsapp status "காதலை காதலால் தவிர காதலாய் கூற முடியாது" என்பது தான். அதை எப்படி கூறுவது காதல் இனிமையானது என்பதை தவிர. ஆதாம் ஏவாள் காதலை தொடங்கி வைத்தனர் எனபது மட்டும் தான் உண்மை. அட யாருக்கு தான் இல்லை காதல்... இப்படி அடுக்கி கொண்டே போய் கொண்டிருக்கிறோம். இப்படி இருக்கும் காதலை திரையில் கண்டால் பொங்குவது மகிழ்ச்சியா கண்ணீரா. ஆம் இரண்டும் கலந்தது தான் அது. அப்படி பட்ட காதலின் மற்றுமோர் பரிமாணத்தை கண்டேன் ஓ காதல் கண்மணி படத்தில்.



மணிரத்தினம்... இன்றுவரை சொல்லாத காதலை.. சொல்லத்தான்.. உருவாக்கத்தின் எல்லையாய் இருந்திருக்கிறார் என்பதை மீண்டும் ஒரு கவிதையோடு கூறி இருக்கிறார். ஓகே கண்மணி என்று கூறும் ஓவ்வொரு நொடியும்.. நமக்கு நாமே கூறி கொள்ளும் ஓகே கண்மணி..ஒன்னும் இல்லை எல்லாம் நலமே என்பது தான். அடடா செதுக்கல்கள் எல்லா இடத்திலும் எல்லா காட்சியின் ஓட்டத்திலும். காதல் கரை உடைந்து ஓடுகிறது. இன்றைய கால கட்டத்தில் மேலை நாடுகளின் தழுவலை கொண்டு இந்தியாவில் எதிரொலிக்கும் கலாசார மாறுபாடு தான் இந்த ஓகே கண்மணி.

அதை கூட எந்த ஒரு சமரசம் இல்லாமல் வார்த்தைப் பேழையோடு ஜாலம் செய்திருக்கிறார் மணிரத்தினம். குடும்பத்தோடு பார்க்கும் படம் அன்று என்று கூறும் அனைவருக்கும் கூறி கொள்ளும் ஒரே பதில் முதலில் திரை அரங்கிருக்கு வாரும் பின் பேசி கொள்வோம். இன்றைய சமுதாயம் மௌனராகம்,இதயத்தை திருடாதே,அலைபாயுதே அன்று, அது ஓகே கண்மணி என்று புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. 

ஏ ஆர் ரஹ்மான் இசை கவர்ந்தது முதலில். ஆனால் படத்தை கண்டபின் அது பீ சீ ஸ்ரீராம்,ஏ ஆர் ரஹ்மான்,மணிரத்தினம் கூட்டணியின் எல்லை இல்லா உணர்ச்சிகளின் உச்சக்கட்டம் என்பதை உணர்ந்தேன். 

நடிகர் நடிகையர் என்று வரை பிரிக்க முடியாமல் ஒவ்வொருவரும்  தங்கள் நடிப்பு திறமையால் உயிர் ஊட்டி உள்ளனர் இந்த படத்திருக்கு.

ஓகே கண்மணி திரைப்படம் ஒரு காலப்பெட்டகம் எப்போது காதலை பூரித்து கொள்ள நினைக்கிறீர்களோ அன்று மீண்டும் உங்கள் கானொளியில்.

என்றும் காதலுடன்,
ப.இரசல்