Thursday, December 28, 2023

 CAPTAIN VIJAYAKANTH (RIP)


Saturday, January 7, 2023

யானை வரும் பின்னே!! மணியோசை வரும் முன்னே!!

 யானை வரும் பின்னே!! மணியோசை வரும் முன்னே! 


யானை வரும் பின்னே! மணியோசை வரும் முன்னே! இந்த  பழமொழியின் அர்த்தத்தை எங்க லட்சுமி யானை கிட்ட இருந்து தான் கத்துக்கிட்டேன். நான் வசித்த தெருவில் தான் லட்சுமி யானைக்கு இருப்பிடம். காலை என் தெருவின் வழியாக சென்றால்.. மாலை பக்கத்து தெருவின் வழியாக வருவாள். மணியோசை கேட்க ஆரம்பித்தவுடன் ஜன்னலை நோக்கி கால்கள் ஓடிவிடும். வீட்டில் வாழைப்பழம் இருந்தால் போதும் யானைக்கு வேண்டுமென வாங்கி தெருவுக்கு சென்று விடுவேன். எங்கள் தெருவில் இருக்கும் பல வயதினருக்கும் யானையை பார்ப்பது,அதற்கு உணவு  கொடுப்பது அதனிடம் ஆசீர்வாதம் வாங்குவது வழக்கம் பழக்கம்.

லட்சுமியின் கண்கள் நம்மை நன்றாக உற்று நோக்கும். சில சில கண் சிமிட்டல்கள் அவ்வப்போது தரும். பிளிறும் ஓசையும் ஆசையாய் கொஞ்சி பேசுவது போல தான் இருக்கும்.  காதுகள் படபடக்கும் பட்டாம்பூச்சி போல தான்.. ஆனால் அது மயிலிறகு விசிறி போல் மெதுவாக போய்  மெதுவாக வரும். அதன் உருவம் மற்ற ஊர் யானைகள் போல் இல்லாமல் உயரம் குறைவு. அதனால் தான் என்னவோ யாருக்கும் அவ்வளவு எளிதில் அவளை பார்த்தால் பயம் வருவதில்லை.  மாறாக அன்பும் புத்துணர்வும் பெருகி வரும் அவளை பார்த்தாலே. நடையை பற்றி சொல்ல வேண்டுமெனில் அவள் கால்கள் நடக்கும் நடையில் தான் அந்த கழுத்து ஆடி அந்த மணியின் ஓசை வரும் கேட்கவே ஒரு இளையராஜா இசைதான். 

நான் அந்த தெருவை விட்டு வேறு இடத்திற்கு மாறி சென்றாலும் மனமும் என் வண்டியும் அதன் இருப்பிடம் இருக்கும் தெரு வழியே தான் செல்லும். எவ்வளவு வேகமாக சென்றாலும் அதன் இருப்பிடம் கடந்து செல்லும் போது வண்டியை மெதுவாக செலுத்தி என் பார்வை அதன் கதவுகள் இடுக்கு வழியே லட்சுமி இருக்கிறதா இல்லை கோவிலுக்கு சென்று விட்டதா என்று பார்த்து விட்டு தான் செல்லும். அதன் இருப்பிடத்தில் மிக பெரிய பச்சை இரும்பு கதவு நடுவே பார்வையாளர்கள் பார்ப்பதற்கு இடுக்கு வழி இருக்கும். நிறைய நாள் ஒரு பேனர் போட்டு அந்த ஓட்டையையும் மூடி விடுவர் அவள் உணவு உண்ணவோ குளிக்கவோ இருக்கலாம்,அதை யாரும் பார்க்க கூடாது என்று. அவள் இருப்பிடத்திலேயே பார்க்கும்போது கூட அவளுக்கு மூட்டை மூட்டையாய் வெள்ளரிக்காய் மற்றும் பல உணவுகள் இருக்கும் இல்லை என்றால் லட்சுமி ஒரு தென்னங்கீற்றை சாப்பிட்டு கொண்டு இருக்கும். பல நாட்கள் தூரத்தில் அவள் வருவது ஏதாவது ஒரு தெருவில் தெரிந்தால் உடனே என் வண்டி அந்த திசை நோக்கி  திரும்பிவிடும். சிலர் கூறுவார்கள் ஏதாவது நல்ல காரியம் செல்லும் போது யானை வழியில் பார்த்தால் அந்த காரியம் சுபம் என்று. யானையே சுற்றி வந்த ஊர் என்பதால் தொட்ட காரியங்கள் சுபமாகும் ஊறாகவே புதுவை மாறியது. சில முக்கியமான பிற கோயில் திருவிழாவுக்கு லட்சுமி யானையை அழைத்து செல்வதுண்டு. அப்படி யானையை அழைத்து சென்ற திருவிழாவில் கூட சாமி எங்கள் லட்சுமி யானை தான். அதன் அன்றைய பராமரிப்பு சும்மா சொல்ல கூடாது தடபுடலாக தான் இருக்கும். பல நாள் பாகனை கண்டு பொறாமை கூட பட்டிருப்போம் எப்போதும் யானை கூடவே இருக்காங்களே என்ற ஏக்கத்தோடு ஒரு சிறுபிள்ளையை போல. பல பேர் தன் குழந்தைக்கு யானை காட்டுகிறேன் என தாங்களும் அதை பார்க்க செல்வார்கள். அப்படிதான் என் மகனுக்கும் மகளுக்கும்  காட்டிய முதல் யானை லட்சுமி. என் மனைவி ஒரு முறை அதன் அருகில் நின்ற போது தடவி கொடுக்கலாமா என்று கேட்பதற்குள் அதன் தும்பிக்கையை அவள் அருகே நீட்டியதால் அன்று முதல் அவளும் என்னை போலே யானை பற்றி கேட்டுக்கொண்டே இருப்பாள். அதன் மீது அன்பும் வளர்ந்து கொண்டு தான் சென்றது. ஊரில் உள்ள அனைத்து செல்போன்களிலும் அவளின் ஒரு புகைப்படம் இல்லாமல் இருந்ததில்லை. ஏன் சுற்றுலா வந்தவர்கள் கூட அதிக புகைப்படம் எடுத்த ஒரே யானை எங்கள் லட்சுமி அதனால் தான் என்னவோ...

அன்றைய தினம்..
மணி 6:40. நடைபயிற்சி முடித்து வழக்கம் போல பால் வாங்க சென்ற போது பால்கார அம்மா தான் கூறினார் லட்சுமி கீழே விழுந்து விட்டது பால் வாங்க வந்தவர்கள் சொன்னார்கள் என்று. நான் எனக்கு தெரியவில்லை சொல்லி விட்டு மனம் அது தங்கி இருக்கும் தெருவிற்கு செல்ல தூண்டியது. அங்கே சென்ற எனக்கு வந்த செய்தி லட்சுமி இறந்து விட்டது என்று. சிறு வயதில் இருந்து எனக்கு மட்டும் அல்ல ஊருக்கே தெரியும் அது எந்த பாதையில் செல்லும் என்று. அடுத்த தெருவிற்கு நுழைந்தவுடன் 20 பேர் கூட்டம் தெரிந்தது மனம் படபடக்க ஆரம்பித்து விட்டது. அருகே சென்று வண்டியை நிறுத்தி ஓடினேன் லட்சுமியின்  உடல் தெருவின் நடுவே இருக்க பலர் அதன் மார்பை அழுத்தி பார்த்து கொண்டிருந்தனர். பாகன் அழுகிறார்.. நான் அழுகிறேன்.. அருகில் இருப்பவர் அழுகிறார்.. வருபவர் எல்லாம் அழுகிறார்கள்... எங்கள் செல்ல லட்சுமி இறந்து விட்டது அது வலம் வரும் தெருவில் விழுந்து இறந்து விட்டது. தெய்வமே இப்படி போயிட்டியே என்ற வார்த்தை என்னை மீறி அதன் கால்களை தொடும் போது உதிர்த்தது. அதன் பின் பிள்ளைகளும் மனைவியும் அழைத்து வந்து பார்ப்பதற்க்குள் 20 100 200 என்று கூட்டம் கூடி கொண்டே சென்றது. பாகனின் கைகள் பிடித்து அழுது விட்டு வந்தேன். அன்று புதுவையே சோகம் முகம் பூண்டது.யானையின் இறுதி ஊர்வலமும் சிவ முழக்கம் போட்டு அகால மரணம் அடைந்த லட்சுமியின் உடலை அகண்ட நிலத்தில் புதைத்தார்கள். 

அவள் போய் நாட்கள் கடந்தாலும் இன்றும் நான் அவள் நினைவாக எழுதுகிறேன்

உயிரே இல்லை உடல் மட்டும் புதையிடத்தில் 
உன்னை தடவி பார்த்தவர்கள் எல்லாம் 
அன்று தழுவி பார்த்து அழுதார்கள் 
விட்டு போன இடம் கூட பூக்கள் பூக்கும் இடமாக மாறி போக
மறந்து மட்டும் செல்லாமல் 
என்றும் உன் நினைவாக அழுதும் அலைந்தும் திரிகிறோம்
மீண்டும் ஒரு யானை வேண்டும்! அது நீயே பிறந்து வரவேண்டும்!
வருடங்கள் ஆனாலும் பரவாயில்லை! 
உன்னை காண காத்திருப்போம் அந்த மணக்குள விநாயகர் சாட்சியாக!

இன்றும்
லட்சுமி இறந்த இடத்தையும் வாழ்ந்த இடத்தையும் வெற்றிடமாக இருந்தாலும் அதை கனத்த இதயத்துடன் கடந்து தினமும் நோக்கம் இருந்தாலும் நோக்கம் இல்லை என்றாலும் செல்கிறேன் அதே இடுக்கு வழியே நீ தெரிவாயா என்று பார்த்து விட்டு. நான் மட்டும் அல்ல என்னை போல பலர்.


-- 
Yours,
Rasal