Friday, March 15, 2013

பாலா "வின்" பரதேசி


அலங்கரிப்புகள்:
தொண்டைக்குழியில் சிக்கிகொண்ட வார்த்தைகளை என் நுனிவிரலில் தட்டும்போதே கண்களில் ஈரம் கசிய தொடங்குகிறது,நான் அவ்வளவு உணர்ச்சி வசப்படகூடியவன் அல்ல, சும்மா யாரும் யாரையும் கொண்டாடுவதில்லை இது இவர் தான் இவரோடயது என தனக்கென அடையாளம் பதிந்து. இன்று மனவியல் ரீதியானவன் என்று சிலரால் இகழ பட்டு, என் படைப்புகள் வேறு என்ற பெருமையுடன் மக்களால் கொண்டாட பட எடுக்க பட்ட படமே "பரதேசி"

அழுகை காட்சிகள் அதிகம் அதனால் படமே ஒரு சோக படம் என்று பேசுவோர் மத்தியில் தன்னை நம்பி வருபவர்க்கு நெகிழவும் உணரவும் பாதிப்பும ஏற்படுத்த முடியும் என்று இரண்டே மணி நேரத்தில் ஒரு நாவலை படமாக்கிய விதம் அந்த புத்தகத்திற்கும்,அவருக்கும்,தமிழ் படங்களுக்கு தனி பெருமை தேடி தரும். திரைப்படம் பொழுது போக்குக்கு தான் என்று வருபவர்களுக்கு முதல் பாதியை ஒதுக்கி பின் பாதியில் இது தான் திரைப்படம் என்று உணர்த்துவதிலும் பாலா, பாலா தான். 

பாலாவும் நடிகர் நடிகைகளும்:
அதர்வா,வேதிகா,தன்ஷிகா,உதய கார்த்திக் மற்றும் கணக்கிட முடியாதவர்கள் நடிப்பால் கிராமத்து மக்களாகவே கொத்தடிமைகளாகவே தோற்றம் அளிக்கின்றனர். இவர்தான் ஹீரோ இவரை சுற்றி தான் படம் என்றில்லாமல் கதைகளம் சுற்றியே திரியும் நடிகர் நடிகைகள் ஏராளம். வேதனையுடனே வாழ்நாள் கடக்கும் முகபாவங்கள் எத்தனை அதில் அவரவர் உழைப்பு எத்தனை. வெள்ளையனுக்கு வேலைபார்க்கும் ஒவ்வொருவனும் கொத்தடிமையே என்று தேயிலை பறிப்பதை போல் கிள்ளி இருக்கும் விதம் இயக்குனரின் அபார திறமைக்கு சான்று.

பாலாவும் வைரமுத்துவும்:
படைப்புகள் தன் ஆளுமை என்றால் படத்தின் ஒரு பகுதி பலம் பாடல் வரிகள். கவிபேரரசு வைரமுத்து கள்ளிகாட்டு இதிகாசம் போல இங்கே தேயிலை காடு இதிகாசம் எழுதி இருக்கிறார். 

கிராமியம் பேசும் காதல் வரிகள்:(அவுத்த பையா பாடல்)
வெண்ணி தண்ணி காச்சவா உன் மேலு காலு ஊத்தவா 
காச்சுபோன கையால உன் காஞ்ச மூஞ்சி தேய்க்கவா!

பஞ்சம் பொழைக்கும் பரதேசியின் வரிகள்:(ஒ செங்காடே பாடல் - பாடல் மொத்தமும் வலிகளே)
உயிரோடு வாழ்வது கூட சிறு துன்பமே 
வயிறோடு வாழ்வது தானே பெருந் துன்பமே!

தேநீரில செந்நீர் வரிகள்:
செந்தேநீரில் செம்பாதி கண்ணீர் தானா!
ஆண்டைக்கு ஒரு பாதி ஆவி போச்சே 
அட்டைக்கு சரி பாதி ரத்தம் போச்சே!

இதற்கும் மேல் ஒரு பெண்ணின் வலியை ஒரே வரியில் "இவள் உயிர் காத்த ஒரு சொத்தும் பறிபோனதே". இப்படி கவிபேரரசு எழுத காரணமும் பாலாவே தான், ஏன் என்றால் படமாக்க பின் தான் வரிகளை எழுதிஉள்ளார். 

பாலாவும் GV பிரகாஷும்:
படத்தின் உயிரோட்டத்தை முதல் காட்சியில் புல்லாங்குழல் வாசிக்க விட்டதில் இருந்து வைமுத்துவின் பாடல் வரிகளை வலிகளாய் இசை அமைத்ததில் படத்தின் இன்னொரு உச்சம். தேவையான இடங்களில் இசையை நிரப்பி தன்னால் தழதழுக்கும் இசையும் கொடுக்க முடியும் என்றும் நிருபித்து இருக்கிறார். ஓசையில்லா இடங்களை சுற்றுசூழல் இசை அமைத்திருக்கிறது. பாலாவால் மட்டுமே இசைஉலகத்தில் தகரமாய் இருப்பவரை இசை அமைப்பாளனாய் இன்னொரு அடி எடுத்து வைக்க தூண்டும் படத்தை கொடுக்க முடியும்.

பாலாவும் செழியனும்:
ஒளிப்பதிவாளர் செழியன் புழதிக்காடு புலம் பெயர்தலில் இருந்து தேயிலை பச்சை காட்டை சுள்ளிகளும் கற்குவியளுமாய் படம் நெடுக பாலாவின் கற்பனையை நம் முன்னே நிழல் ஆட பாட வைத்துள்ளார். ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு கதை சொல்லும் விதம் கேமரா வளைவுகள் நேர்த்தியின் எடுத்துக்காட்டு. சில காட்சிகள் சிம்னி விளக்குகள் கொண்டே படம் ஆக்க பட்டுள்ளது. அடடா கவிதை இசை ஒளிபதிவு எல்லாம் கலக்கும் போது மெய்மறக்க தவறவில்லை.

பாலாவும் நாஞ்சில் நாடனும்:
இந்த திரைப்படம் இலக்கியம் பேசியதற்கு இன்னொரு காரணம் நாஞ்சில் நாடன். மக்களை வசியப்படுத்தும் பேச்சில் கங்காணி கொத்தடிமையாய் மாற்றும் வரிகள் கிண்டலும் உண்மையுமாய். மந்திரியார் காமெடி நினைத்தால் கூட சிரிப்பு வருது. கிளைமாக்ஸ் இல் பேசும் வரிகள் ஒவ்வொன்றும் வலியின் உச்சகட்டம். பாலாவின் படைப்புகளில் சிறந்ததாக இப்படம் மாறி போக எழுத்தாளர் நாஞ்சில் நாடனும் ஒரு காரணம்.

பாலாவும் மற்றவர்களும்:
படத்தொகுப்பு கிஷோர் நாவலை பக்கம் பிரட்டியது போல் ஒவ்வொரு காட்சியாய் விஸ்தரிக்க பட்டுள்ளது. கலை இயக்குனரின் உழைப்பு 1939க்கே கொண்டு செல்கிறது. உடை வடிப்பாளர் எத்தனை நேர்த்தி. மற்றும் பலரை திரைக்கு பின்னால் ஒவ்வொரு வீட்டிற்க்கும் ஆகும் செங்கலை போல் பயன்படுத்தி இருக்கிறார் பாலா.

பாலாவும் நானும்:
நெஞ்சுக்குள்ளே புழுங்கி வடியும் சோகங்களை பிரதிபலிப்பாய் ஒரு திரைப்படம் இதை பார்த்து கண்ணீர் சிந்தாவிடில் நான் என்ன திரைப்படம் பார்த்தேன் என்ற கேள்வி. உண்மை அது தான் கண்களில் நீர் தேங்குகிறது, மனம் இது திரைப்படம் தான் என்று உணர மறுக்கிறது. பாலா மீது தான் எத்தனை பேருக்கு கோபம் அட போங்கையா இந்த படம் பார்த்துட்டு சொல்லுங்க. இது உண்மை கதையின் தழுவல் பாலாவின் கைவண்ணத்தில். கேலியாய் பேசும் சுற்றி இருப்பவர்களுக்கு பாலா கொடுக்கும் பதிலடி "சில வேடிக்கை மனிதரை போல் வீழ்வேன் என நினைத்தாயோ".

சிறு கண்ணீருடன் உங்கள் அன்புடன்,
ரசல் 

2 comments:

  1. அருமையான விமர்சனம். நானும் படம் பார்த்தேன். பிரமித்தேன்.கடைசி பத்து நிமிடங்கள் பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை

    ReplyDelete
    Replies
    1. நன்றி இம்ரான்.. பிரமிப்பு இன்னும் கூட அடங்கவில்லை.

      Delete