Monday, March 23, 2015

வாழ்க்கைப் போர்! - கவிதை


எழுத துடிக்கும் கைகளுக்கும் 
வார்த்தைகளை தேடிகொண்டிருக்கும் புத்திக்கும் 
இடையே போர்!

முதல் போர்!
கடந்த காலம் தரும் நினைவுகளை சுமந்து..
சுவுடுகளை மறைக்கும் தவறுகளின் சீர்திருத்தம்!
காதலில்லை உலகிலென 
கண் துருத்தி பார்த்தால்! 
மடை திறந்தார் போல் ஊற்றுகிறது வீதிக்கோர் காதல் 
விளக்கதிற்கோர் காதல், போட்டிக்கொரு காதல் 
உணர்விர்க்கோர் காதல்... அது பச்சை பசேலென தழைத்திருந்தது..
நடக்கும் பாதையில் புத்துணர்வு பிறந்தது
ஆனால் வாடியவை கண்டு வெதும்பியது...

இரண்டாம் போர்!
நிகழ்காலம் தந்து கொண்டிருக்கும் சுவாரசியங்களில் 
கால மாற்றம் தரும் ஆச்சரியங்களின் சீர்திருத்தம்!
சுமையென கருதும் உலகில் 
கண் துருத்தி பார்த்தால்!
பணி சுமை, உடல் சுமை, தேடல் சுமை 
வாழ்க்கை சுமை, வாழ்வாதாரம் சுமை 
ஆனால் பாசமெனும் சுமை அனைத்தையும் கட்டிக்கொண்டது!
வாழ்க்கையில் தெளிவு இருந்தது இன்றைய நாள் போனதென்று.. 
ஆனால் இழந்தவை கண்டு வெம்பியது..

மூன்றாம் போர்
எதிர்காலம் புரியாமல் எதை நோக்கி என்றும் தெரியாமல்..
கடந்தவை மீண்டும் பெறமுடியாது என்று விளங்கியும்!
சேமிப்பு ஒன்றே வாழ்வாதாரம் எனும் உலகில் 
கண் துருத்தி பார்த்தால்
பண சேமிப்பு, இடம் சேமிப்பு, மருத்துவ சேமிப்பு 
கல்யாண சேமிப்பு, களிப்பு சேமிப்பு, வீடு சேமிப்பு 
ஆனால் அவை திட்டமிடலின் பரஸ்பரம் 
வருமானம் சேமிக்கலாம்.. வளமாகவும் இருக்கலாம்!
ஆனால் இரண்டாம் போர் கருதி ஏங்கியது!

http://www.chillzee.in/poems-link/207-p-rasal-kavithaigal/4177-vazhkkai-por

இப்படிக்கு,
ப.இரசல் 

பார்த்திபனின் பார்வதி - சிறுகதை


மேகம் ஜல்லடையில் நீர் ஊற்றி மழையென பூமாரி கொண்டிருக்கும் ஜான் எப் கென்னெடி விமான நிலையம் நோக்கி... வான் வாய்க் எக்ஸ்பிரஸ்வேயில்  வேகமெடுத்து ஓடி கொண்டிருந்த மகிழுந்தில் பார்வதியும் பார்த்திபனும் உரையாடி சென்று கொண்டிருந்தனர்.

“உனக்கு நினைவிருக்கிறதா! அதோ.. இரண்டு வருடங்கள் முனனால்.. நம்மால் எதிர்கொள்ளவே முடியாமல் போன ஒரு சந்தர்ப்பம். அப்போது கூட நீ கூறினாயே.. பரவாயில்லை பார்த்துக்கலாம்!!” என்று வினவினான் பார்த்திபன்.

“என்ன அப்படி நான் மறந்துட்டேன்!! நீங்க தான் எல்லாவற்றையும் ஞாபகம் வச்சிருப்பீங்களா என்ன?. இப்போ எதைப் பத்தி சொல்றீங்க!” என்றாள் பார்வதி.

“சத்தியமா சொல்றேண்டி.? என்னை பொறுத்த வரைக்கும் உனக்கு ஞாபக சக்தி குறைவு தான்... சரி! ரெண்டு clue தரேன். இப்போ சொல்லு பார்க்கலாம். அன்றைக்கு நீ தனியா வர பயந்த! நான் இருக்கேன்... வான்னு சொன்னேன். என்ன கண்டுபிடிச்சியா!” என்று குறும்புப் பார்வையுடன் கேட்டான்.

“இல்லங்க!! நீங்க எத சொல்றிங்க! ஒரு நாள் ஆபீஸ்ல ஒருத்தன் என்னை தொந்தரவு பண்றான்.. அவன் என்னை ஒரு இடத்தில மீட் பண்ணனும்னு சொன்னான்.. அதுவா!.” குழப்பப் பார்வையில் கேட்டாள்.
     
     “இன்னும் சொல்லுடி.. அன்று நானும் உன் கூடவே அந்த இடத்திற்கு வந்திட்டு!!! அவனைத் துரத்திட்டு அதே இடத்துல நாம ரெண்டு பேரும் romance பண்ணிவிட்டு வந்தோமே...  அதான பாரூ செல்லம்”. என்றான் பார்த்திபன்.

“அப்போ அது இல்லையா!” என்ற குழம்பிய கண்களுடன் அவனை  நேராய் பார்த்து என்னவென்று அறிய சற்று காதலுடன் பார்க்கத் துவங்கினாள்.
     
    “ஏய்! ஆய்! அப்படி பார்த்தா கண்டு பிடிச்சிடலாமா என்ன? சும்மா முழிக்காத யோசி!” என்று ஆதே கலகலப்புடன் குறும்பாய் அவள் காதுகளில் தன் விரல் ஸ்பரிசம் தந்தான்.

“சமாளிக்க முடியாத பிரச்சனை.. நம்ம கல்யாணம் தான்!!.. அதுக்கும் அதே தான் நான் சொன்னேன்!! நீங்களும் அதான் சொன்னீங்க!! கண்டிப்பா நீங்க அத பத்தி சொல்லலன்னு மட்டும் தெரியுது...” சிமிட்டிய கண்களுடன் அவனை பார்த்துக்கொண்டே அவளுடைய பேச்சைத் தொடர்ந்தாள்.

“அப்புறம்....”

“எனக்கு பிரசவ வலி வந்தப்ப... நீங்களும் முதல்ல எதுவுமே பேசல.. நானும் வலியிலே அழுவுறேன்... ஆனா என்னோட அழுகையை பார்த்துட்டு.. கையை பிடிச்சிக்கிட்டு நான் இருக்கேன்னு சொன்னீங்க!! ஆனா!! சுகப்பிரசவம் கஷ்டம்ன்னு சொல்லி.. உங்களையும் விட்டுவிட்டு என்னை மட்டும் ஆபரேஷன் தியட்டர் கூட்டிட்டு போனாங்க. அய்யோ!......வலியோடு ஒரு குழ்ந்தை பிரசவத்திற்கு உள்ளே போறதுக்கு முன்னாடி இன்னொரு குழந்தையாய் உங்களை விட்டுட்டு போனேன்!”, என தொடர்ந்தாள் பார்வதி.

     “சத்தியமா நான் மறந்துட்டேன்.. இப்போ சொல்லுங்க.. நீங்க எதையும் மறக்க மாட்டீங்க.. ஒத்துக்கிறேன்...” என முனக ஆரம்பித்தாள்.

     “சொல்லி முடிச்சிட்டியா எல்லாத்தையும்??? இல்ல இன்னும் ஏதாவது இருக்கா?” அவன் வினவ. அவள் பூமுகம் மலர புன்னைகையுடன் கண் சிமிட்டி “ஆமாம்” என்றாள்.

     பார்த்திபன் தொடர்ந்தான், “இதுவரைக்கும் நம்ம வாழ்கையில நடந்த எல்லா சுவாரசியமான விஷயத்தை சொல்லிட்ட... ஆனா... கசப்பான ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டியே... காதல், கல்யாணம், குழந்தையை தாண்டி... “பிரிவு” நாம் ரெண்டு பேருமே சந்திக்க முடியாத ஒண்ணா இருந்திச்சி.. இல்லையா!

அவள் அவனை நேர்முகமாய் உற்று நோக்கினாள்.

     “அமெரிக்கா போகிற வாய்ப்பு வந்த பிறகு உன்னை விட்டுட்டு எப்படி போறதுன்னு தெரியாம கடைசியில் எப்படியோ உனக்கும் சேர்த்து டிக்கெட் புக் பண்ணி வந்து உன்கிட்ட சொன்னா. எனக்கு தனியா வர பயமா இருக்குன்னு சொன்ன... நான் இருக்கேன் நீ வான்னு சொல்லி..  உன்னை இங்கு அமெரிக்காவிற்கு கூட்டிட்டு வந்தேன்..” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள்.

“ஆமாங்க!! உண்மை தான் அந்த நேரத்துல அப்படி ஒரு முடிவு நாம எடுக்காம இருந்திருந்தா ரெண்டு பேருக்குமே ரொம்ப கஷ்டம் தான்..” என்று முடித்தாள் பார்வதி.

பார்த்திபன் சற்று முகத்தை சுருக்கி தொடர்ந்தான் “சரி! இப்போ ஏன் கேட்டேன் தெரியுமா?  அப்படி பட்டப் பிரிவு நம்மை வாட்ட கூடாதுன்னு சொல்லுகிற நாம்.........

இதோடு பிரியப்போறோம்..
     
     முழுதும் அமைதி நிலவியது மகிழுந்தின் வெளியே சாரலும் அடங்கி போனது. உள்ளே பின்புற இருக்கையில் கண்கள் கலங்கிய நிலையில் பார்த்திபன் மட்டும்... மனதில் மீண்டும் தொடர்ந்தான்.

“தேங்க்ஸ் பார்வதி.. உன்னோட நினைவுகளோட.. என்னால் முடிந்தவரை வாழ்ந்து விட்டேன்.. இதுக்கும் மேலே நீ சந்தோஷமா தான் இருக்கேன்னு தெரிந்தபிறகு.. என்னோட புதிய வாழ்க்கையை தேடிப்போறேன் இந்தியாவுக்கு. இந்த இரண்டு வருடம் நான் ஒரு வாழ்க்கைத்துணையாய் எப்படி இருக்க வேண்டுமென உன் நினைவுகளில் கற்றுக்கொண்டேன்.” என்று முடித்தான் விமான நிலையம் அடைந்ததை அறிந்து.

இரண்டு வருடங்களுக்கு முன்னால்...

பார்வதி பார்த்திபனை விட்டுவிட்டு தன் குடும்பத்திற்காக காதலை தியாகம் செய்தாள். அவர்களின் கடைசி உரையாடல்.

அன்று...

     “இந்த காதல் பிரிவு ரொம்ப கஷ்டமா இருக்கு பார்வதி!.. ப்ளீஸ்!! என்ன விட்டு விட்டு போறது.. உனக்கும் அப்படி தான் இருக்கும்னு நினைக்கிறேன்.. நான் இருக்கிறேன் உன்னை பத்திரமாப் பாத்துக்குவேன்.” என்றான் பார்த்திபன்.

     “இதற்கும் மேலே உன்னை காயப்படுத்த முடியாது. எனக்காக காத்திருன்னு பொய் சொல்லவும் விரும்பல.. வலிக்கும் தான் பரவாயில்லை பார்த்துக்கலாம்...” என்று கூறி நடந்தாள் பார்வதி .

இன்று...

ஜான் எப் கென்னடி விமான நிலையம் உள்ளே போகும் முன்.. பார்த்திபன் தன்னுடைய facebookஇல்

“Coming back to India is like coming back from dream to reality. @John F Kennedy Airport”
Facebook பக்கம் புதிதாய் ரெப்ரெஷ் செய்து பார்த்திபனின் newsfeed இல் status க்கு கீழ்

தன் கணவனின் பிறந்தநாள் வாழ்த்துப் பதிவு செய்திருந்தாள் பார்வதி..

“நம்பிக்கையில்லா வாழ்கையில்
உன் கை கொடுத்து தன்னம்பிக்கை கொடுத்தாய்
இன்று உன் மனைவியாய்...
பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆசை கணவா! இது கனவா!”

காதலுடன்,
பார்வதி.

-முற்றும்-


Title Design: Bala Krishnan

எழுத்தும் உணர்வும்,

ப.இரசல்

Thursday, March 12, 2015

ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கை


முதல் திரைப்படம் வீட்டில உள்ள dvd வெளியிடு. C2H Cinema 2 Home பெயர் சூட்டப்பட்டதிலே விளக்கம் உள்ளது. அதுவும் போக இது சேரனின் படம். ஐம்பது ரூபாயில் திரைப்படம் உங்கள் வரவேற்பறையில்  டிஜிட்டல் 5.1 ஒலியில். 



விமர்சனங்களால் வர்ணிக்கபட்டவர் சேரன் அவருடைய முந்தைய படங்கள் மற்றும் தேசிய விருதுகள் அதற்க்கு எடுத்துக்காட்டு. சமுதாய சீர்திருத்த நோக்கோடு தான் படங்கள் இருக்கும் ஆட்டோகிராப் படம் தவிர்த்து. வசனங்கள் குறிப்பாய் படத்தின் இறுதியில் ஈர்ப்பாய் இருந்து மக்களை யோசிக்க விடும். இப்படி இருந்த சேரனின் ஆட்டோகிராப் பிந்தைய படங்கள் வணிக ரீதியாக ஓடவில்லை என்றாலும் நல்ல கருத்துகளை தாங்கி நின்றது. ஆனால் அவருடைய கடைசி முயற்சி theatre இல் ரிலீஸ் பண்ண முடியாமல் போனது தமிழ் திரைஉலகம் எதை நோக்கி போய் கொண்டிருக்கிறது என்பதற்கு மற்றுமோர் உதாரணம். ஏனென்றால் இப்போது distributors கையில் தான் ஒரு படம் வரும் வராது என்ற நிலை உள்ளது. சேரன் நடித்த ஆடும் கூத்து என்ற திரைப்படம் தேசிய விருது வாங்கிய படம் திரையரங்குக்கு வராமலே ஜீ தொலைகாட்சியில் வெளியிட பட்டது என்பதே எனக்கு சமிபத்தில் தான் தெரியும். இப்படி முடக்க பட்ட பல திரைப்படங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியை தன்னுடைய படத்தில் இருந்தே ஆரம்பித்த சேரனுக்கு முதற் கண் நன்றிகள்  மற்றும் வாழ்த்துக்கள்.

ஜே கே திரைப்படம் சேரனின் மற்ற படங்களில் இருந்து இந்த கால சூழ்நிலையில் உள்ள மக்களை குறிவைத்து உருவாக்க பட்ட படம். சற்று தாமதம் ஆனதாலும் அதை பற்றி அதிகம் வலைதளங்களில் பேச பட்டதாலும் சில நேரம் ஏன் இந்த காட்சியை வைத்தார் என கேள்வி கேட்க தோனுகிறது. உதாரணம் நாம் facebook பற்றி அதிகம் படங்களில் பார்த்தது தான். கதை ஒரு நண்பன் தன்னை சுற்றி உள்ளவர்கள் அதாவது பெற்றோர்,தம்பி,தங்கைகள் மற்றும் நண்பர்களுக்காக பணம் சம்பாதிக்கும் ஒரு நலம் விரும்பி அது ஏன் என்பது மட்டும் தான் படத்தின் சுவாரசியம் அதுவும் படத்தின் போக்கில் யூகிக்க முடிகிறது. ஆங்காங்கே பளிச் வசனங்கள் சில காட்சிகளில் நாம் எதை பார்க்க தவருவோமோ அதை சுட்டி காட்டியும் உள்ளார். discovery தொலைக்காட்சி சொல்லும் பறவைகள் கதை உண்மையில் யோசிக்க வைக்கிறது. பாடல்கள் ரசிக்கும் படியாய் இல்லை என்றாலும் அனைத்தும் காட்சி கோர்வைகளாய் தான் இருந்தன. சிறிய திரையில் பார்ப்பதால்  ஒளிப்பதிவு பற்றி விளக்க முடியவில்லை. எடிட்டிங் படத்திற்கு என்ன தேவையோ அது போலவே இருந்தது. மொத்தத்தில் முயற்சியை பாராட்டும் அளவிற்கு திரைப்படம் பாராட்டும் அளவு இல்லை. ஆனால் சமுதாய கருத்துக்கள் கூற இதிலும் தவறவில்லை.

நன்றி சேரன் 

என்றும் அன்புடன்,
ப.இரசல்