Monday, February 25, 2013

அமீரின் ஆதி பகவன்

உசுபேத்தல்கள்:
ஆதி பகவன் என்ன கதை? அமீர் என்ன சொல்ல போறார்? அப்படி ஏன் ரெண்டு வருஷமாச்சி? யுவன் இசையில ஒரு ஹிந்தி பாட்டு ஏன் ஆல்பத்துல வந்திச்சி? இதுக்கு நடுவுல சம்பந்தமே இல்லாம ஹிந்து கடவுளோட பேர எதிர்த்து போட்ட சண்டைல ஏன் அமீரின் ஆதி பகவன்ன்னு மாத்தினாரு? A Mafioso Action Love story எப்படி அமீர் கொடுக்க போறார்?

முதல் பாதி:
படம் நன்றி தெரிவிச்ச அடுத்த நிமிஷமே தெலுகுல படம் ஓடுது A Ameer Film ன்னு போட்டப்புறம். ஒரு வேல தெலுகு பதிப்பை பார்க்க வந்துட்டமான்னு நினைக்கும் போது தமிழ் சப்டைட்டில் போட்டாங்க,அப்பாடா! தமிழ் படம் தான். ஒரு பெரிய ஹீரோக்கு கிடைக்க வேண்டிய மாஸ் அறிமுகம் ஜெயம் ரவிக்கு. கொஞ்சம் அவருக்கு அதிகம்ன்னு தோன்றினாலும் அமீர் படம் என்ற ஒற்றை வார்த்தைக்காக என் மனநிலையை மாற்றி பார்க்க ஆரம்பிதேன்.

கொஞ்சமும் நம்ப முடியாத காரணத்திற்காக பட்டயாவில் வந்து தவறான பாதையில் சென்ற மகனை பிரிந்து வாழும் தாய் மற்றும் தங்கை. இதில் நம்ப முடியாத காரணம் பிழைக்க பட்டையாவிற்க்கு வந்தது தான். ஆனால் அங்கு என்ன பிழைக்க முடியுமோ அதில் ஆதியாய் கோவமும் மிடுக்குமாய் ஜெயம் ரவி. இந்த கதாபாத்திரம் கொஞ்சம் தமிழில் நமக்கு பழக்க பட்டதே. அநியாயம் தட்டி கேட்க போய் கரம் பிடிக்கிறார் நீத்து சந்திரா. இப்படி காட்சிகள் அங்கும் இங்குமாய் சரிவர ஓட்ட படாத நிலையில்,தங்கை காதலன் ஒழுக்கமில்லாதவன் என்று தங்கையை வற்புறுத்தி முடியாத பட்சத்தில் தான் அமீரின் திரைக்கதை சூடுபிடிக்கிறது. சபாஷ் என்று நிமிரவைத்து அடுத்த நொடி. இடையில் நீத்து சந்திராவின் மூலம் காப்பாற்ற பட்டு திருமணம் செய்ய மும்பை வருகிறார்.

இதுவரை அமீரின் படங்கள் முன் பாதி சுமார் என்று சொல்ல பட்டதில்லை. இந்த படம் சுமார்க்கும் ஒரு படி கீழே இறங்கியதற்கு காரணம் காட்சிகளின் அங்கும் இங்கும் அலைகழிப்புகள். இதனால் அமீர்க்கு action படம் ஒத்து வராது என்று தோன்ற பெற்ற நிலையில் தான் கதையின் முக்கிய திருப்பம், மும்பையில் பகவான் ஆம் இன்னுமொரு ஜெயம் ரவி. அதுவும் திருநங்கையாய், கதையில் இப்படி வந்த பின் யோசித்ததில் சரி இதுக்கு முன்னாடி பம்பாயில் அப்படி ஏதோ பண்ணிதான் பட்டயாவிர்க்கு வந்தான் என்ற என் யுகங்கள் சரமாரியாய் வரத்தொடங்கின.ஆனாலும் ஏதோ இருக்கு என்று தோன்றியதும் இடைவேளை.

இரண்டாம் பாதி:
சபாஷ்..... இப்போ தான் படமே. உண்மையில் அமீரின் உழைப்பு தெரிந்தது. கதையை நகர்த்திய விதம் இரண்டாம் பாதியில் கெளப்பிடான்யா என்று தான் சொல்ல வேண்டும். அதுவும் ஜெயம் ரவிக்கு இது போல் படம் அமைந்ததில் உண்மையில் வெற்றி தான். திருநங்கை கதாபாத்திரத்துக்கு தேவையான அணைத்து நெளிவு சுளிவுகள் அடடே "ஹான்". பரபர கிளைமாக்ஸ் முன்னாடி வரும் அகடம் பகடம் ஹிந்தி பாடல் நன்றாய் இருந்தாலும் தேவையே இல்ல அந்த நேரத்துல. அமீரால் action படம் கண்டிப்பா கொடுக்க முடியும் இதை நான் கண்டிப்பாய் சொல்கிறேன். ஆனா பழக்க பட்ட கதை அவ்ளோ தான். கொடுத்த விதத்தில் மாறுபட்டு இருக்கிறது. சில லாஜிக் அத்துமீறல்கள் மசாலா படத்திற்கு உரியன, அதை தவிர்த்து வெளியே வரும் போது படம் நன்றாய் இருந்தது இரண்டாம் பாதியினால் இல்லையேல் படமே இல்லை.

சில பதியப்பட வேண்டியவைகள்:
நீத்து சந்திரா - இரண்டாம் பாதியில் ஜெயம் ரவிக்கு அடுத்து உழைப்பை கொட்டியவர். தீயவர் கூட்டணியில் இருக்கும் அனைத்து பெண்களை போல் குடிக்கிறார், ஊதுகிறார் மற்றும் சண்டை போடுகிறார். சண்டை காட்சிக்கு தனி பாராட்டுக்கள் ஏனென்றால் நாமெல்லாம் சாக்கி சான் படத்துல வர கதாநாயகி சண்டை போட்டு தான பாத்திருக்கிறோம் இல்லையேல் முடியை பிடித்து இரண்டு பெண்கள் சண்டை போடுவர்.அப்படியேதும் இல்லாமல் ஆம்பளைக்கு நிகரா சண்டை போடும் இவர் வரவேற்க படவேண்டியவர்.

யுவன் இசை - ஐய்சலம் ஐய்சலம் பாடல் அருமை அதற்க்கு நடனம் ஆடிய ஷாக்ஷி அதனினும் அருமை.நல்லதொரு நடன இயக்கம். மற்ற பாடல்கள் சுமார் இருந்தாலும் பகவான் ராப் நலம். பின்னணி இசை சத்தமாய் இருந்தது ஆனால் மற்ற படங்களை போல் இல்லை.

மொத்தத்தில் ஒரு முறை பார்க்கலாம் அந்த அளவிற்கு இரண்டாம் பாதியில் திரைக்கதை வேகமாய் இருந்ததால். மற்றபடி அமீரின் முந்தைய படங்கள் முடிந்து வரும் போது வரும் அழுத்தம் மட்டுமே வரவில்லை. ஆனால் தன் முந்தைய படைப்புகளுக்கும்(கவனிக்க- படைப்பு) இந்த படத்திற்கும் மாறுபட்ட களத்தை தன்னால் எடுக்க முடியும் என்று நிருபித்து இருப்பதால் இதுவும் அவருக்கு வெற்றி தான்.

என்றும் அன்புடன்,
ரசல் 

Saturday, February 23, 2013

ஹரிதாஸ் - சிறப்பு ஆற்றல் பெற்ற குழந்தை


குமாரவேல் இதற்க்கு முன் எடுத்திருந்த இரண்டு படங்கள் "நினைத்தாலே இனிக்கும்" மற்றும் "யுவன் யுவதி". தோல்வி ஒருவனை எந்த அளவு பாதித்து இருந்தால் அவன் வெற்றி அடைய இந்த அளவுக்கு ஒரு திரைப்படத்தை கொடுக்க முடியும் என்ற உதாரணம் "ஹரிதாஸ்". ஆச்சரியமூட்டும் தகவல்கள் சேகரித்து சில உண்மை சம்பவங்களை தழுவி எடுக்க பட்ட கற்பனை கதை என்று முன் மொழிந்திருந்தாலும் இரண்டரை மணி நேரம் தொய்வுறவில்லை திரைகதையில்.

நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ஆட்டிசம் என்பது மூளை குறைபாடு இல்லை அது ஒரு அவர்கள் வாழும் உலகம் என்பது? சிலர் பைத்தியகாரர்கள் என்கிறார்கள், ஆம் நாம் அவர்களை புரிந்து கொள்ளமுடியாமல் பைத்தியகாரனாய் மாறுகிறோம் என்பதை ஆணித்தரமாய் உணர்த்தியது இந்த படம். நம் இந்தியாவில் ஆட்டிசம் படைக்க பெற்ற குழந்தைகளை "special child" என்பதும் அவர்களை பள்ளியில் சேர்த்தே ஆகவேண்டும் என்ற விதிமுறையும் எனக்கு தெரியவந்ததும் இந்த படம் தான்.
ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம்,பள்ளி குரூப் போட்டோவில் சிநேகா அந்த சிறுவனை காமெராவை பார்க்க வைக்க கஷ்டப்பட்டு கடைசியில் அவன் காமெராவை பார்க்க மற்றவர் எல்லாம் அந்த சிறுவனை பார்ப்பதாய் அமைந்த காட்சி போதும் குமாரவேலின் திறமைக்கு.

நம் தமிழ்ப்படத்தில் வெகு சிலரே இந்த திரைபடதிருக்கு பொருந்துவார் என்ற என் கருத்தும் மாறுபட்டு போனது கிஷோரின் நடிப்பில். ஒரு கண்ணியமான போலீஸ் அதிகாரியாய் ஆகட்டும் தன் பிள்ளையின் மேல் உள்ள அன்பினால் தன் வேளையில் விடுப்பெடுத்து பள்ளியில் மகனுடன் அமர்ந்து நெகிழ செய்கிறார். அவனின் உலகம் என்ன என்று புரிந்து கொள்ளும் இடத்தில் உண்மையான தந்தை பாசம்.

சிநேகாவை பல காட்சிகள் அழவைத்து திரைகதை நகர்திருந்தலும் முதல் காட்சியில் அவரின் படபடப்பும் நடிப்பும் அட போட வைத்தது. சிறவனை காணாமல் ஏங்கும் காட்சியும், அவனை திருடனாய் பார்த்த மக்களிடம் பேசும் வார்த்தைகளும் மனதில் நிறைவாய் பதிந்தது. 

பரோட்டோ சூரி இந்த படத்திலும் அவர் எந்த கேரக்டர் நடிந்திருந்தாரோ அந்த கேரக்டர் ஆகவே தெரிகிறார். அவரின் கொச்சைஇல்லா நகைச்சுவை பாராட்டப்பட வேண்டியது. 

கதையின் மூலகரு ஆட்டிசம்,எந்த வகையிலும் முன் வந்த "தாரே சமீன் பர்" ஹிந்தி படத்தை ஞாபக படுத்த கூடாது என்ற மெனக்கெடல் தான் கிஷோரின் போலீஸ் கதையும். ஒரு குத்து பாடல் போலீஸ் குடி இருப்பில் வந்தாலும் அதில் போலீஸ் பற்றியே வரும் சின்னஞ்சிறு அலுப்புகளை பகிர்ந்ததில் ஒன்றும் தவறில்லை என்றே தோன்றியது.

விஜய் ஆண்டனி அடடா இளையராஜா கிட்ட கொடுத்திருந்தா பின்னி இருப்பாரே நினைபதர்க்குள் அருமையான பின்னணி இசையில் ஈர்த்து விட்டார். ராஜா முகம்மது எடிட்டர், ரத்தினவேலு கேமரா, லால்குடி ந இளையராஜா கலை இப்படி நட்சத்திர கூட்டணிக்கு கிடைத்த வெற்றி இந்த ஹரிதாஸ்.

திரைப்படம் முடிந்து வெளியே வரும்போது திரையை மீண்டும் திரும்பி பார்த்து விடைபெற முடியாமல் விடைகொடுத்து சென்றேன் நான் திரையில் பார்த்த ஹரிதாஸ்க்கு.

என்றும் அன்புடன்,
ரசல்

Thursday, February 14, 2013

சில நேரம் காதல் தாமதமா வரும்!!!


காலம் பல மனித உடலைப்பற்றி அறிவியலால் விளக்கி இருந்தாலும், நம் உடலின் ஒவ்வொரு அணுக்களையும் பிளந்தெடுப்போம் காதல் வயப்பட்டு. அப்படி வயப்பட்டு போராடி அடைந்த காதலை மறக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது. அங்கே ஊடல் கூடல்கள் இனித்திட பழகிய நாட்களை நினைவில் கொண்டு சுகமாய் வாழ முற்படுவோம். 

காதல் கதைகள் எத்தனை விதம்? அதில் நாம் ரசித்தது எத்தனை? வாழ்ந்தது எத்தனை? வருஷத்தின் 365 நாளும் ஒவ்வொருவரின் காதல் கதையில் அடுத்த திருபங்களுக்கு தயாராகி கொண்டிருக்கிறோம், காதலர் தினம் என்ற ஒன்று அந்த வெள்ளைக்காரன் நமக்கு பகிராமல் சென்றிருந்தால்? இங்கே காதலை அவரவர் சந்தித்த நாளை தான் காதலர் தினமாய் கொண்டாடி இருப்போம்.அப்படி இருந்தும் சில பேருக்கு சில நேரம் காதல் தாமதமா வரும் அதுவும் காதலர் தினத்தில் இங்கே.

(அப்படியே நீங்க நிக்கிற இடத்துல வேகமா ஒரு பஸ் பெரிய ஹாரன் சத்தத்துல கடக்குது - Flash)

கோயம்பேடு ப்ரீபெய்ட் ஆட்டோ வரிசையில் சுபா நெடு நேரம் காத்திருந்து தாம்பரத்திற்கு ரசிது வாங்கினாள். காசாளர் ஏற இறங்க பாத்துட்டு தான் ரசிது கொடுத்தாரு. பின்ன கோயம்பேட்டுல இருந்து தாம்பரத்துக்கு பேருந்து இல்லாத மாறி ஆட்டோக்கு கேட்டா?, எவனோ ஒருத்தன் நல்லா சம்பாதிக்க போறான் அவ்ளோதான். அடுத்த ஆட்டோ ராஜவோடது, ஹ்ம்ம் அம்பது ரூவா சம்பாரிக்க காலைல எட்டு மணிக்கு ஸ்டாண்ட்ல போட்டு இப்போ ஒம்பதர மணி  இப்பவாச்சும் கிராக்கி வந்திச்சே ஒரு சந்தோஷத்தோட பாத்தா ஒரு பொண்ணு வந்து நிக்குது. இதுக்கிட்ட இருந்து எக்ஸ்ட்ரா பத்து ரூவா கூட கெடைக்காதுன்னு நினைப்போடவே பார்த்தான்.

சுபா: அண்ணா! தாம்பரம் போகணும்!
ராஜா: (என்னது தாம்பரமா? ரசீதை பார்த்தா 250 ரூவா, அட்ரா சக்க! காலைல இருந்து ஒன்னும் சரியில்லன்னு பார்த்தா.இப்படி வந்து மாட்டிகிச்சே) போலாம் வாம்மா!
சுபா: அண்ணா போற வழில அசோக் நகர்ல ஒருத்தர கூட்டிட்டு போய்டுவோம். உள்ளலாம் போகத்தேவல பஸ் ஸ்டான்ட்லயே தான்.
ராஜா: சரி மா! ஏறுங்க போலாம்.

(இடையில் சுபா ஒருவரிடம் தன் கைபேசியில் யாரிடமோ அசோக் நகர் வந்திடுமாறு சத்தம் போட்டு கூறினாள். கொஞ்சம் இறுக்கமும் அதிகாரமும் குரலில் வெளிப்படவே ஒரு பையன் தான் வர போகிறான் என்பதை யூகிக்க முடிந்தது)

அசோக் நகர் நெருங்கியது.

சுபா: இங்க! இங்கதான் ஒரு ரெண்டு நிமிஷம் அண்ணா!
(கைபேசியில் - நான் வந்துட்டேன்.. எங்க நீ? நீல சட்ட தான போட்டிருக்க? சரி வா சீக்கிரம் நான் ஆட்டோ ல இருக்கேன்.)

(தூரத்தில் நீல சட்ட போட்டுட்டு ஒரு பையன் நடந்து வந்தான்)

ராஜா: ஏம்மா! அவாரன்னு பாரு! 
சுபா:(புருவத்தை உயர்த்திய படி ராஜாவை ஒரு பார்வை பார்த்து விட்டு) இல்ல அவர் இல்ல.

ஐந்து நிமிடம் கழித்து சட்டென்று....

பின் இருந்து ஒரு ஊதாவும் நீளமும் கலந்து கருப்பு கோடு போட்ட சட்டை போட்டவன் வந்து நின்னான். கையில ஒரு பூச்செண்டு. சுபாவிடம் காதலர் தின வாழ்த்துக்கள் என்று காதில் கூவினான். சுபா பூச்செண்டின் ஒவ்வொரு பூக்களையும் ஒரு நொடியில் ஆராய்ந்தாள் அதன் அழகையும் அடுக்கினையும். அவள் தன் மார்போடு அணைத்ததையும் குழந்தை சிரிப்புடன் அந்த பையனை நோக்கியதில் யாருக்கும் காதல் வயப்பட தோன்றும். இருவரும் கைகுலுக்கினர் இல்லை பொது இடம் நாகரிகம் கருதி இரு கைகளால் கட்டி அணைத்து கொண்டனர்.

ராஜா: (ஒரு சில நிமிடங்கள் சிலையாகி பின் சுதாரித்தான்) ஏம்மா போலாமா!
சுபா: தோ! போலாம்னா! சார் சுரேஷ்.. ஏறுங்க லேட்டா வந்துட்டு நிக்காதீங்க.. உள்ள போங்க..

(ஆட்டோ மெதுவாய் தாம்பரத்திற்கு தன் வழித்தடங்கள்களை தாண்டி புறப்பட்டது. ராஜாவிற்கு அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று தெளிவாய் கேட்கும் இந்த வண்டி சத்தத்திலும். இரு புற கண்ணாடிகளை இருவரும் தெரிவது போல் திருத்தி வைத்தான்)

"நீல சட்டை போட சொன்னா இது என்ன கட்டம் போட்ட சட்டை அதுவும் நீலம் அங்ககங்க இருக்கு", செல்லமாய் கடிந்தாள் சுபா.அவனும் லேசு பட்டவன் இல்லை "நீ மட்டும் என்ன நீலமா போட்டிருக்க அங்ககங்க பூ டிசைன், ஒரு கலர்ல இருக்கு இது பத்தாதுன்னு கண்ணாடி வேற சின்ன சின்னதா", அந்த கண்ணாடியில் முகம் பார்க்க கூட முடியாது என்று செய்முறை விளக்கம் வேறு குறும்பாய்.

"காதலர் தினத்துக்கு ஒரு பூங்கொத்து தானா,வேறொன்னும் இல்லையா",சுபாவின் எதிர்பார்ப்பிலும் சின்ன நியாயம் இருக்கத்தானே செய்யும். "சின்ன பூங்கொத்துக்கே அரை மணி நேரம் வரிசைல நின்னேன் தெரியுமா,கால்லாம் ஒரே வலி",என்றான் சுரேஷ். "நீ வேணும்னா கால் நீட்டி வச்சிக்கோ" என்றாள் அக்கறையாய்.

"சரி நான் இன்னைக்கு எப்படி இருக்கேன்",என்றாள் ஆவலாய்."nose தான் கொஞ்சம் oversize, its ok ma plastic surgery பண்ணிடலாம்", கிண்டலாய் களாய் ஆனால் நொடி பொழுதில் தோள்பட்டையில் அடி,அடி,அடி(மூணு தடவ)."ஸ்சு, விளையாட்டுக்கு சொன்னேன் டி , அதுக்குள்ளே அடி பின்னிட்ட, உனக்கென்னடி என் செல்லம் எப்பவுமே அழகுதான்", தோளை தேய்த்து கொண்டே பம்மினான்.

(அவள் உண்மையிலே அழகுதான், கடிந்து கொண்டாலும் கோவமில்லாமல், இடித்து உக்கார்ந்தாலும் விரசம் இல்லாமல் - ஆட்டோ ராஜா)

"சரி வீட்ல என்ன சொல்லிட்டு வந்த", அவன் வினவினான்."எங்க ஆயிரம் கேள்வி வெளிய ப்ரெண்டை பாக்க போரேன்னு சொன்னதுக்கு, அப்புறம் சீக்கிரம் வந்துடு சொல்லி விட்டாங்க, ஆனா அக்கா கண்டு புடிச்சிட்டா",என்றாள் குழப்பத்தோடு.

"உங்க அக்கா எப்பவுமே ஸ்வீட் தான்,பரவால தெரிஞ்சும் அனுப்புராளே, உனக்கு என்ன வேணும் சொல்லு வாங்குவோம்", ஆர்வத்துடன் அவன்."எனக்கு ஒன்னும் வேணாம் சேத்து வச்சா எதாவது பெரிசா வாங்கலாம், இன்னிக்கி உன் கூட இருக்கறது விட வேற ஒன்னும் பெருசா தேவல", அவன் கன்னங்களை தடவி கூறினாள்.

(என்ன பொண்ணு இந்த பொண்ணு இந்த கண்ணாடி போட்டு சப்பையா இருக்கற பையன இப்படி உருகி உருகி காதலிக்குது - ஆட்டோ ராஜா)

கண்ணிமைக்கும் நேரத்தில் அவன் கன்னத்தில் முத்தமிட்டாள், அவன் செய்வதறியாது அவள் கைகளை நீண்ட நேரம் கண்னமிடயே வைத்து நீண்ட நேரம் யோசித்து பின்  முத்தம் அளித்தான் கைகளுக்கு.

(அடடா!! பகல் காட்சியா இல்ல இருக்கு! - ஆட்டோ ராஜா)

"சரி நேத்து உன்ன அந்த புக் வாங்க சொன்னேனே வாங்கிட்டீயா",வினவினாள். அவனோ தலையை சொரிய."நீ எப்பவுமே உனக்கு வேணும்னா மொதல்ல வாங்கிடுவ,எனக்குன்னா மட்டும் யோசிப்ப,பேசாத போ", கோபமாய் அவள்.

அவனும் சமாதனம் என்று ஏதேதோ கூறினான் அவள் செவிமடுக்க வில்லை. சற்று கோவமாய் கத்தியும் பார்த்தான், பின் அமைதியானான்.

(என்னடா இது! இவ்ளோ நேரம் கொஞ்சிகிட்டாங்க, இப்போ எதுவுமே பேசாம பாத்து நிமிஷமா வராங்க- ஆட்டோ ராஜா)

ராஜா : எம்மா தாம்பரம் வர போது எங்க இறங்கனும்.
சுபா: சொல்றேன்னா எங்கன்னு!! நேரா போங்க!

"சரி சொல்லு, எங்க போலாம்? விடு அத பத்தி பேசவேணாம்", கோவம் போய் பொய் கோவமாய் கேட்டாள். "இல்லமா!, சாரி நான் வேணும்னு பண்ணல மறந்துட்டேன்", கெஞ்சினான்."நான் அத பத்தி பேச வேணாம்னு சொன்னேன் இல்ல, விடு", அவள் உண்மையாய்."ப்ளீஸ், கொஞ்சம் சிரிங்களேன்,மன்னிச்சிடு",அவன் மேலும் கெஞ்சலுடன். சிரிப்புடன், " போடா இன்னிக்கு உன்கிட்ட சண்ட போடா கூடாதுன்னு வந்தேன், நானே அத மறந்து கத்திட்டேன்,எனக்கு கொஞ்சவும் கெஞ்சவும் கத்தவும் நீ தான இருக்க", கண் கலங்கிய சிரிப்புடன் அவள் கூறினாள்.

(கெஞ்சவும்,கொஞ்சவும்,கத்தவும் நீ தான் இருக்க, உறுத்தியது ஆட்டோ ராஜாவிற்கு)

சுபா: அண்ணா! இங்க தான் நிறுத்துங்க.(பாஸ்கின் அண்ட் ராப்பின்ஸ் ஐஸ் கிரீம் கடையை காட்டினாள்)
ராஜா: எது மா இங்கயா! (அட பாவிகளா ஐஸ் கிரீம் சாப்பிட இவ்ளோ தூரம் வரணுமா)

இறங்கியதும் பணத்தை கொடுத்தாள், அதுக்குள்ள அந்த பையனும் பணம் கொடுத்தான், இருவரும் அவரவர் கைகளை தட்டி விட்டு கடைசியில் அந்த பொண்ணு கொடுத்த பணத்தை வாங்கினான் ராஜா. "ஏம்மா திருப்பி வருவீங்களா நான் வேணும்னா வெயிட் பண்றேன்" என்றான் ராஜா. "இல்ல அண்ணா, பரவால ஒரு மணி நேரமாவது ஆகும்", என்றாள். "சரிம்மா! சவாரி வந்தா போறேன்,இல்ல இங்க தான் இருப்பேன்",என்றான் ராஜா. சரி என்ற சமிக்கையோடு கண் சிமிட்டி சென்றாள் சுபா.

கைகரம் பற்றியே தான் இருவரும் உள்ளே சென்றனர். என்னடா காதல் என்ற கேள்விகள் ஆயிரம் எழுந்து,ஏன் நம் மனைவி எப்பவுமே கடுப்பேத்து ரா, என்ற கேள்விகளுடன் காலை நடந்த சண்டையை(இது தான் காலைல இருந்து எதுவும் சரி இல்லன்னு சொன்னது இது தான்) யோசித்து கொண்டிருந்தான். ஆட்டோ சவாரிக்கு எத்தனை பேர் கேட்டாலும் மனம் என்னவோ இந்த காதல் ஜோடியை  விட்டு செல்ல ஏங்கியது.

(ஒரு மணிநேரம் இல்லை ஒன்றரை மணி நேரம் கழித்து)

வெளியே அவர்கள் வந்ததும் ராஜா முகத்தில் சந்தோஷம்(இன்று 500 ருபாய் வருமானம்), அவர்களை கைகளை ஆட்டி வரச்சொன்னான். "ஏன்னா சவாரி கெடைக்கலையா!",என்றால் சுபா. "இல்லமா,ஒன்னும் பெருசா வரல பக்கத்துல ஒரு சவாரி போயிட்டு தான் வந்தேன்,சரி வாம்மா கோயம்பேடு தான",என்று கதை கட்டினான் ராஜா.

(ஒரு சில உரையாடல்களுக்கு பிறகு, ஆட்டோ கோயம்பேடு நோக்கி பயணமானது)

"டேய்! உனக்கு எவ்ளோ திமிரு இருந்தா என்கிட்டயே என் ப்ரெண்டு அழகுன்னு சொல்லுவா", அவள் மீண்டும் சினுங்கல் சண்டை ஆரம்பித்தாள்."போடி! உண்மையா அவ அழகு தான் ஆனா நீ வேற எனக்கு",என்றான் அவன்.

"உனக்கு தெரியுமா, நான் ஏன் ஆட்டோல போலாம்னு சொன்னேன்னு", அவள் வினவினாள்.(ராஜா ஆர்வமானான்)."ஏன் comfortable ஆ போலாம் அதான",என்றான் ஏதோ சரியாய் கண்டு பிடித்தது போல. "போடா லூசு!, பஸ்ல நிறைய பேர் இடிச்சி நின்னுட்டு வருவாங்க,சத்தமா இருக்கும், அதுவும் இல்லாம நீ பக்கத்துல இப்போ இருக்குற சுகம் அங்க வராது, அதான்",என்றாள் காதலுடன்.

(ஓஹ்ஹோ ஆட்டோல வரதுல இவ்ளோ விஷயம் இருக்கா - ஆட்டோ ராஜா)

சிலபல உரையாடல்கள் உன்னதைமாய் வாழ்கையை பற்றி, சில பயத்துடன், சில கொஞ்சலுடன் அசோக் நகர் வந்தடைந்தனர்.

அவன் இறங்கினான் இவள் இளகினாள் ஏங்கினாள்,கண்களில் கண்ணீருடன்.அவன் ஆறுதல் படுத்தி மீண்டும் கைகளால் கைகளை தன நெஞ்சோடு வைத்து விடைகொடுத்தான். அவள் ஏறினாள் ஆட்டோ புறப்பட்டது.

கண்ணாடியில் ராஜா சுபாவை பார்த்தான் இன்னும் அந்த கண் கலங்கிய முகத்தோடு அங்கே இங்கே திருப்பி கை குட்டையை தொடைத்து கொண்டிருந்தாள். கோயம்பேடு வந்தது பணத்தை கொடுத்தாள். அவள் கனத்த இதயத்துடன் நடந்து சென்றாள்.

அங்கே அவள் கண்ணீர் ராஜாவை ஏதோ செய்தது,காலையில் சத்தமிட்ட போது அவன் மனைவி அழுதது கண் முன்னே வந்து நின்றது. புறப்பட்டான் வீட்டிற்க்கு கடையில் இரண்டு முழம் மல்லிகையை வாங்கி கொண்டு. இது எல்லாம் கெஞ்சவும் கொஞ்சவும் கத்தவும் நீ தான் இருக்கே சொன்ன அவளுக்கு மனதில் நன்றி கூறி புறப்பட்டு சென்றான். 

சில நேரம் காதல் தாமதமா வரும்!!!

என்றும் அன்புடன்,
ரசல்

Monday, February 11, 2013

A Book of பொக்கிஷம்

என் மனதினை பிரட்டி போட,நான் எழுதி வந்த நாட்குறிப்புகள் நினைவிற்கு வந்தன. எழுதும் பழக்கம் தற்போது அடிகடி வருவது,முன்னாளில் அது என்றாவது வருவது. யாருடைய பள்ளி பருவமும் அது பாடம் படிப்பதற்கு மட்டும் அல்ல மாறாக வாழ்க்கை பாடம் படிபதற்கும் தான். என்னில் அடங்கா வாழ்கை நெறிகளை கடைந்தெடுத்து கற்றவை! அவைகளுள் சுவாரசியம் குறையாமல் இன்றும் பல நினைவு நாடாக்களை நாம் என்றாவது நினைத்து பார்ப்பதுண்டு. என் முதல் நாட்குறிப்பு ஏடு என் கால பொக்கிஷம்,இன்று அதன் நினைவோடு உங்கள் முன் "A Book of பொக்கிஷம்".

எட்டாம் வகுப்பு பயிலும் போது என் தந்தையின் டைரியே முதல் தூண்டுதல்! நானும் எழுத வேண்டும் என்று மனதில் பதிய செய்தது. ஆனால் நான் எழுதிய டைரி அதற்க்கு முந்தைய ஆண்டு வீட்டில் வந்து உபயோக படுத்தாமல் இருந்த ஒன்று. ஏழாவது ஆண்டு விடுமுறையில் புத்தங்களை சுத்தம் செய்யும் போது கண்டெடுக்க பட்ட அந்த டைரி என்னுடைய நாட்குறிப்பானது. என்ன எழுதலாம் எழுதணும் என்றே புலப்படாத ஒன்றும் அறியா வயது? ஆக நான் எழுதியது தினசரி நடந்த சுவாரசியங்கள் மட்டுமே. இங்கு அவைகளுள் இச்சமயம் சுவாரசியமாக தோன்றியதை பதிவு செய்கிறேன்.

முதல் மூன்று மாதங்கள்:

யோசித்து பார்த்ததில் தெளிவாய் தெரிந்த முதல் எழுத்துப்பதிவு? எட்டாம் வகுப்பு ஆரம்பித்த முதல் வாரம், அதிகம் பிரயோகித்தது இந்த நாட்குறிப்பை தான். அதுவும் ஒவ்வொரு பாடத்திற்கும் ஆசரியர் எத்தனை புத்தகங்கள் வாங்க வேண்டும் என்ற குறிப்புகளே. அது போக வாரம் ஒருமுறை வரும் "Drawing and Crafts" வகுப்பில் வழக்கம் போல் ஆசிரியர் ஆண்களை எதாவது செய்ய சொல்லிவிட்டு பெண்களுக்கு கோர்க்கவும் தைக்கவும் கற்று கொடுப்பார். நான் என்ன செய்ய போகிறேன் அருகில் இருக்கும் நண்பனுடன் கட்டம் போட்டு விளையாடுவது இல்லை புக் கிரிக்கெட் விளையாடுவது அதற்கும் உதவியது இந்த நாட் குறிப்பு தான்.

இப்படி கிறுக்கல்கள் இல்லா நாட்குறிப்பு, ஒரு முறை அண்ணனுக்கு வந்த வாழ்த்து மடலில் இருந்த ஆங்கில வாழ்த்து, புதிதாய் தோன்றியதால் அதை எழுதி வைத்துகொண்டேன். இப்போ யோசிக்கும் போது சிரிப்பு தான் வரும் அதை நினைத்தால், அதன் பின் ஒவ்வொருவரும் அதையே சில வாழ்த்துமடலில் எழுதிய போது.

someone has goldship
someone has silvership
but i have only oneship
that's your friendship

ஹ்ம்ம் இதுவும் என்னடையது என நம்பிய சிலர், அதுபோகட்டும் ஒரு பாடலில் வந்த ஆங்கில வார்த்தையும் நானாய் மாற்றி எழுதியதும் உண்டு.

sharpner is made of plastic
rope is made of elastic 
life is fantastic
make it romantic

மொத்தத்தில் டிஆர் போன்ற கவிதைகள் தான் நான் ஆரம்பத்தில் எழுதியதும் எழுத நினைத்தும்.

இரண்டாம் மூன்று மாதங்கள்:

கிறுக்கிய பக்கங்கள்,வகுப்பு பாடம் எழுதியது மற்றும் imposition எழுதியதை தவிர்த்து இன்னும் சில வரைபடங்களும் இந்த நாட்குறிப்பை அலங்கரித்து கொண்டிருந்தன. அலங்கரிப்பு இல்லை அலங்கோலம் என்றும் கூறலாம். பள்ளி பருவத்திற்கும் ரசனைக்கும் எப்பொழுதும் தொடர்புகள் உண்டு. ரசனை எதை பற்றியது? அது ஒவ்வொருத்தரை பொருத்தது. எனக்கு தமிழ் மேல், எப்படி என்று என்னால் கூற முடியாது நான்காம் வகுப்பில் தமிழ் பாடத்தில் தோல்வி அடைந்திருக்கிறேன். அது தான் என்னோவோ சில நேரங்கள் என்னை தமிழுக்கு ரசிகனாக்கியது. அந்த சமயம் தமிழுலும் நான் சில கவிதைகள் கிறுக்கி இருக்கிறேன். எல்லாம் இப்படி தான் முடிந்திருக்கும் ,அதாவது எதுகை மோனை காதலால்.கவிதை வரிகள் ஞாபகம் இல்லை ஆனால் ஒன்றன்பின் ஒன்றாய் அடுக்கி எழுதி இருக்கிறேன். 

நினைத்தேனே 
இணைந்தேனே
இழுத்தாயே 
விழுந்தாயே 

இதனிடயே எங்கள் வகுப்பிற்கு Training Teacher ஆக ஒருவர் வந்தார்,அவர் பெயர் மாலதி. முதலில் அவர் அந்த பாடத்தை எடுக்க வந்ததும் நாங்கள் சந்தோஷப்பட காரணம்,இருக்கற வாத்தியார் தான் நமக்கு என்னக்குமே பிடிக்காதே அது போல தான். இப்படி அவரை பற்றி தான் ஒருமுறை என் நாட்குறிப்பில் எழுதி இருக்கிறேன்.
பாடம் எடுப்பதில் சில வித்தியாசங்கள் உள்ளது மற்றவர்கள் புத்தகத்தை பார்த்து எடுப்பார்கள் இவர் ஒரு பேப்பரில் அன்றைய பாடத்தை எழுதி படித்து எங்களுக்கும் புரிவதைபோல் எடுப்பார்.சில வகுப்புகள் எங்களுக்கு படிபதற்கும் பேசுவதற்கும் மட்டும் விட்டு விடுவார். அது போல் ஒருசில சமயம்  எங்களின் திறமைகளை எடுத்து காட்டவும் வைப்பார். இப்படி ஒருமுறை ஒரு நண்பன் நான் கவிதை எழுதியதை போட்டு கொடுத்தான். அதனால் அன்று நான் முன்னமே எழுதிய அல்ல சுட்ட ஆங்கில கவிதையை கூறி கைதட்டல்கள் வாங்கி இருக்கிறேன். இப்படி மாலதி மேடம் பற்றி எழுதிய சிறிய குறிப்புகள் ஆங்கங்கே காணலாம் என் குறிப்பேட்டில்.

மூன்றாம் மூன்று மாதங்கள்:

முழுமையாய் ஆறு மாதம், மாலதி மேடத்தின் Training முடிந்து எங்களை விட்டு பிரியும் தருணம். எங்களுக்கு எடுப்பது போலவே மற்றொரு வகுப்பிலும் அவர் கிளாஸ் எடுக்கிறார் எனபது தெரியும், அவர்களுக்கு எங்கள் வகுப்பிற்கு முன்னதாகவே விடை கொடுத்துவிட்டார். ஆனால் விடைபெறுமுன் அவர்களுக்கு அவர் கூறிய வார்த்தைகள் சிலமணித்துளிகள் நெஞ்சை கணக்கவைக்காமல் விடவில்லை. அதை எங்களிடம் கூறும் முந்தய வகுப்பில் என்னிடம் அவருக்காக கவிதை எழுத சொன்னார். எழுதினேன் பத்து வரிகளில்.....

..............................
..............................
..............................
..............................
..............................
நீங்கள் எங்களை விட்டு பிரிவதாய் சொன்னீர் 
அதற்காக நாங்கள் விடுகிறோம் கண்ணீர்!

மற்றவரிகள் ஞாபகம் இல்லை என்றாலும் கடைசி இரண்டு வரிகள் இன்றும் நினைவில் உள்ளன. படித்து முடித்துடன் வகுப்பில் எல்லோரும் கை தட்டினர்,மாலதி மேடமும் மிகுவும் ரசித்தார். அந்த கவிதை முதல் பிரதி அடித்து திருத்தி எழுதியது நாட்குறிப்பில் தான். அவருக்காக கொஞ்சம் மெனக்கெட்டு அழகாய் எழுதி ஒரு காகிதத்தில் கொடுதேன் என்னுடைய பரிசாய்.

அதன் பின் அவரை பற்றி எங்களுடன் பகிர்ந்துகொண்டார். மாலதி மேடம் கல்யாணம் ஆனவர் என்று தெரியும் ஆனால் அவரது கணவர் ஒரு விபத்தில் இறந்துவிட்டார் என்று கேட்கும் போது எங்கள் மனம் கலங்கி விட்டது. அதோடு முடியவில்லை அவரின் சோகம்! கணவர் விபத்தில் மூளை சாவு அடைந்தவர் அதனால் அவரின் உறுப்புகளை தானம் செய்துள்ளார்!! என்று கேட்டபோது அவர்மேல் கருணையும்! மரியாதையும்! அதிகரித்தது. மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் அவர் கூறியதை அடித்து திருத்தி பல முறை எழுதி பார்த்தேன், எதுவுமே கோர்வையாய் வரவில்லை.

கடைசி மூன்று மாதங்கள்:

ஆண்டு விழாவில் என்னையும் இன்னும் சிலரை ஒரு பட்டிமன்றம் நடத்த வைத்தார் எங்கள் ஆசிரயர் ஒருவர். ஒரு பக்க கட்டுரை அதை நாட்குறிப்பில் பதிவு செய்தேன். ஒரு ஐந்து நிமிட பேச்சு தான் அது பல முறை ஏற்ற இறக்கத்துடன் பேசி முடிக்க வேண்டும். இன்றும் அந்த நினைவை மறக்க முடியாது, நான் முஸ்லிம் மதத்திற்கு ஆதரவாக பேசினேன் மற்றவர்கள் இந்து கிறிஸ்டியன் பற்றி பேசினர். முடிவில் தீர்ப்பு மத நல்லிணக்கமே என்று முடியும். மேடை ஏறும் போது தான் ஒருவர் எனக்கு தாடி ஓட்டினார். பார்த்ததில் நிறைய பேருக்கு அடையாளம் தெரியவில்லை.கடைசியில் சில வார்த்தைகளை மறந்து நானாய் சில வார்த்தைகளை கோர்வையாய் கூறி சமாளித்தேன். 

முழு தேர்வுக்கு முழு நேரமும் படிப்பில் செலவிட்டாலும் அவ்வபொழுது கிரிக்கியவற்றை படித்து பார்ப்பேன். ஆண்டு தேர்வு முடிந்தது உடம்பெல்லாம் இன்க் தெளித்து ஓடி ஓடி கடைசியாய் மாலதி மேடம் வீட்டிற்க்கு சென்று தேநீர் சாப்பிட்டு விட்டு வந்தோம்.அதன் பின் முழு ஆண்டு விடுமுறை சந்தோஷமாய் செலவிட்டு கழித்ததில் இந்த பொக்கிஷத்தை முழுதாய் மறந்துவிட்டேன். ஆனால் என் கைகளில் இன்னுமொரு டைரி வந்து சேர்ந்தது அதை தான் ஒன்பதாம் வகுப்பு நிகழ்வுகளுக்கு பயன்படுத்தினேன்.


முற்றும்:

பொக்கிஷத்தை மறந்தேன் என கருத எனக்கு பல வருடங்கள் ஆகி உள்ளது. அப்பொழுதே அந்த பொக்கிஷம் கடையில் எடைக்கு போட்டாயிற்று. கொஞ்சநாள் சிலர் கையில் பொட்டலமாய் இருந்திருக்கலாம் இல்லை வெறும் குப்பையாய் மாறி இருக்கலாம். 

கையில் இருந்தால்தான் பொக்கிஷமா 
மனதில் நிறைந்தாலும் பொக்கிஷம்தான் 
பக்கம் புரட்டும் போது வரும் ஞாபகம் 
சிறியதாய் புன்சிரிப்பை வெளிக்காட்டும் 
காலம் கடந்த நினைவுகள் 
உயிர் எக்கோடி சென்றாலும் மரவதில்லை 
அதை இத்தருணம் எழுதுவேன் என்றும் நினைக்கவில்லை.

இது என் பள்ளிபருவத்தின் ஒரு பகுதி தான்.. மற்றவை நினைவில் பொக்கிஷமாய்...

என்றும் அன்புடன்,
ரசல் 

Friday, February 8, 2013

விஸ்வரூபம்


நான் சினிமா ரசிகன் எதற்காக மூன்று வாரமாய் படமே பார்க்கவில்லை என்று வினவினால்? முதன் முதலில் நான் தோற்றிருக்கிறேன் தனியே படம் பார்க்க சென்று காட்சிகள் ரத்து செய்யப்பட்டது என்ற காரணத்தினால். எதுவாக இருந்தாலும் விஸ்வரூபம் கண்ட உடன் தான் மற்ற படங்களை பார்ப்பேன் என்ற உறுதி. எத்தனை விமர்சனகள் வெளிய வந்திருந்தாலும் ஒரு வரி கூட படிக்க முடியாமல் திணறி இருக்கிறேன். இதற்காக வலைதளத்தையும் புறக்கணித்து இருக்கிறேன். மற்ற படங்களை போல் விமர்சிக்க கமல் படம் ஒன்றும் தமிழ் படம் இல்லை. இது ஆங்கில படம் நமக்காக தமிழில் வெளிவந்திருக்கிறது. ஆதலால் கமலின் உன்னத படைப்பிற்கு தலை வணங்கி நான் ரசித்ததை உங்களிடம் பகிர்கிறேன்.

விஸ்வரூபம் ஆச்சரியங்களும் புரிதல்களும்:

திரைப்படம் ஆரம்பத்திலயே கதையின் ஆழம் கருதி எம் படத்தில் வன்முறை காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன என்று செம் தமிழில் அறிக்கை நெகிழ செய்தது. 

பட்டாம்பூச்சியின் சிறகடிப்பில் `உலகின் எங்கோ மூலையில் ஒரு இயற்கை நிகழ்வு ஏற்படலாம்` எனபது "கயோஸ் தியரி" அது தான் தசாவதாரம். பெயர் போடும் போதே புறாக்களின் சிறகடிப்பில் விஸ்வரூபம் பதைபதைப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இங்கே புறாக்களும் அதன் சத்தங்களும் துளியமாய் அரங்கை அதிரடிக்கிறது.

தமிழ் திரைப்படங்கள் பாதியில் இருந்து பார்த்தால் புரிந்து விடும் என்ற கேளிபேச்சு இந்த படத்தோடு முடியட்டும். கண்டிப்பாய் அரங்கிற்கு அரை மணி நேரம் கடந்து வரும் எவருக்கும் படம் புரிய வாய்ப்பே இல்லை. 

அதே போல் அந்த அரை மணி நேரம் விஸ்வநாத் என்கிற கதக் நடிகனை பார்த்தாலே போதும், நடிப்பு என்றால் என்ன என்று. ஓடுகிறான்,நடக்கிறான்,பேசுகிறான் பெண்ணியத்தோடு என்பவர்க்கு ஒரு கொட்டு அது பரதமாய் வாழ்கிறான் என்று பொருள்.

முதல் சண்டை கண்டிப்பாய் பார்பவர்களுக்கு இது தான் மாஸ் என்று புரியும். எங்கே கண் மூடி திறப்பதற்குள் சண்டை முடிந்ததா என்று ஆச்சரிய பாடுபவர்க்கு படத்தில் பதில்களும் உள்ளது.

எழுத்துரைக்கும் உச்சரிப்புகளை எழுதியதும் கமல், அதில் நையாண்டியும் உண்டு நாசுக்கும் உண்டு. நீங்க நல்லவரா கெட்டவரா கேள்விக்கும் விடை கொடுத்திருக்கிறார்.

கலை இயக்குனர் இளையராஜா பெயர்க்கு ஏற்றார் போல் கமலின் கனவுகளுக்கு வடிவம் கொடுத்திருக்கிறார்.

ஒளிப்பதிவு சானு வர்கீஸ் அமெரிக்காவையும் ஆப்கானையும் அழகும் அழுக்குமாய் புழிதியாய் படம் பிடித்து நிறைவை ஏற்படுத்தி இருக்கிறார்.

எடிட்டிங் மகேஷ் நாராயண் இவர் இல்லை என்றால் கமலின் கதை சொல்லிய விடம் புரிந்திருக்க வாய்ப்பில்லை.

இசை அதிலும் "அணு விதைத்த பூமியிலே" பாடல் இனிமையின் உச்சம் காட்சி படுத்தியதில் பளார். இது மக்களை மக்கள் நேசிக்க வேண்டிய இடம் என ஓடும் இடமெல்லாம் குண்டும் துப்பாக்கி சத்தமுமாய் கமலின் குரல். அன்பே சிவம் வரிசையில் இந்த பாடலும்.

அண்ட்ரியா பூஜா மற்றும் பலர் கொடுத்த வேலையை செய்து முடித்திருக்கிறார்கள்.

ஒரு கலைஞன் என்று விஸ்வரூபம் எடுக்கிறான் அங்கே அவனின் படைப்பை முடக்கும் போது. இங்கே அடிப்பட்டாலும் தமிழின மக்கள் பெருமை படவே தன் உதிரம் சுண்டும் வரை போராடி வெள்ளித்திரையில் விஸ்வரூபம் அடையும் கமலுக்கு நன்றி.

இங்கே இன்னும் சிலரை இப்படம் எடுத்தமைக்காக வாழ்த்துக்கிறேன். 

Produced by
Andrew Greve .... consulting producer

Original Music by
Shankar Mahadevan
Loy Mendonsa
Ehsaan Noorani

Cinematography by
Sanu Varghese

Film Editing by
Mahesh Narayan

Production Design by
Boontawee 'Tor' Taweepasas

Art Direction by
Ilayaraja

Costume Design by
Gautami Tadimalla

Production Management
Dan Campbell .... production manager

Second Unit Director or Assistant Director
Azad Alam .... assistant director
Ike .... assistant director
C.S. Karthikeyan .... assistant director
Krishna .... assistant director
Praveen Kumar .... assistant director
Rajesh M. Selva .... assistant director
Jude S. Walko .... assistant director
Lee Whittaker .... second unit director

Art Department
Shelly Newman .... property master

Visual Effects by
Vikas Surajbali Nag .... digital compositor

Stunts
Steven Dutton .... stunt driver
Shelly Newman .... stunt driver
Lee Whittaker .... stunt coordinator

Camera and Electrical Department
Dan Irving .... still photographer
Jonathan Sessions .... grip

Costume and Wardrobe Department
Preethi Kanthan .... assistant costume designer

Transportation Department
Steve Dutton .... picture car coordinator

Other crew
Jose Mas Perez .... location intern
Rajesh M. Selva .... script supervisor
Edward A. Sherman IV .... assistant location manager

உங்கள் அன்புடன்,
ரசல்