Sunday, November 30, 2014

காவியத்தலைவன் என் பார்வையில்

காவியத்தலைவன் யார்? என்று முன்னோட்டம்(trailer) பார்த்த போதே கேள்வி எழுந்தது, அது நிச்சயமாக ரஹ்மான் இசையாக தான் இருக்கும் என நினைத்திருந்தேன். பாடல்கள் அனைத்தும் ஒரு கதை கூறின. அதிலும் அல்லி  அர்ஜுனாவும் கர்னமோட்சமும் விரும்பியும் கனவில் உருவக படுத்தியும் என்னை நாடக உலகிற்கு கொண்டு சென்றன. படமும் வெளிவந்து விட்டது நானும் கண்டு விட்டேன்.



நிஜ கதாபாத்திரங்களின் நிழல்கள்:

நிஜம் : கிட்டப்பா பாகவதர் 
நிழல்: சிதார்த் "காலிப்பா பாகவதர்"

நிஜம்: சங்கரதாஸ் சுவாமிகள் 
நிழல்: நாசர் "சிவதாஸ் சுவாமிகள்"

நிஜம்: கே.பி.சுந்தராம்பாள் (அவ்வையாராய் நடித்தவர்)
நிழல்: வேதிகா "வடிவாம்பாள்"

நிழல்: ப்ரித்திவிராஜ் "கோமதி நாயகம் பிள்ளை"  நிஜம் யாரென்று தெரியவில்லை.

இது சரித்தர படமாய் இருப்பதால் தான் இத்தனை நிஜ கதாபாத்திரங்கள் போன்று நிழல் கதாபாத்திரங்களை 
உருவாக்கி உள்ளாரோ இயக்குனர் வசந்தபாலனும் எழுத்தாளர் ஜெயமோஹனும் என்று தோன்றியது.

கதையின் உயிரோட்டம் நடிப்பு தான்:

சிதார்தும் ப்ரிதிவியும் இங்கே நடிப்பு போட்டி நடத்தியுள்ளனர். ஒருத்தருக்கு ஒருத்தர் சளைத்தவர் இல்லை, ஆனால் திரைகதையில் ஒருவர்க்கு மேல் ஒருவர் எப்போதும் வென்று கொண்டுதான் இருக்கிறார்கள். வார்த்தையோடு ஏற்ற இரக்க நடிப்புக்கும் வார்த்தையோடு வாஞ்சையான நடிப்புக்கும் இவர்கள் வித்தியாசம் காட்டுவது நடிப்பின் உச்சக்கட்டம். வேதிகாவும் அழகென பதுமையாய் இல்லாமல் ஆங்காங்கே வீரிய நடிப்பும் நடனமும் காண மனம் விரும்பும், அதிலும் அவருடைய முதல் காட்சியில். நாசர் சொல்லத்தேவை இல்லை வாழ்த்திருக்கிறார் அதே புருவம் உயர்த்திய கண்ணும் கடுமை பேசிய உதட்டசைவும்.

அலங்காரமும் ஒளிப்பதிவும்:
கால திரைப்படத்திற்கு தேவையான அனைத்தும் எல்லா காட்சிகளிலும் தெரிந்தது. பழமையான பொருட்கள்,நாடக மேடை அலங்காரம் என காவியம் பேசின ஒவ்வொரு காட்சியும். அதை எல்லாம் நமக்கு படம் பிடித்து ஒளிப்பதிவு செய்தவர் நிரவ் ஷா. இவருக்கு இது ஒன்றும் புதிதல்ல ஏற்கனவே மதராசபட்டினம் படம் இவர் புகழ் கூறும். இரவு காட்சிகளிலும் நாடக காட்சிகளிலும்  கண்கள் எதை பார்க்குமோ அதை தான் படமெடுத்துள்ளார். 

திரையாடலும் வசனமும்:
பழமையின் கதையை தேர்ந்தெடுத்து அதற்க்கான ஆராய்ச்சிகள் செய்து திரைக்கதையை ஜெயமோஹனும் வசந்தபாலனும் உருவாக்கி இருந்தாலும் திரைப்படமாய் எடுக்க சில சிரமங்களை சந்தித்திருக்க வேண்டும். அல்லது முழுமையாய் கொடுக்க முடியாமல் போயிருக்கலாம். ஏனென்றால் முழுமையாய் திரைப்படம், ஆங்கங்கே ஏதோ விடுபட்டதை போல் உணர்தேன். நாடக நடிகர்களின் சுதந்திர போராட்டத்தில் பங்கு பற்றியும் பேசிவிட்டு நலிந்த நாடக சபாக்கள் பற்றியும் கூறியும்  திரைக்கதைக்கு வலிமை சேர்க்க வில்லை. வசனங்கள் நாடகத்தின் உள்ளே மட்டும் செந்தமிழை பேசி மற்ற நேரங்களில் நிகழ்கால பேச்சு வழக்கை கொண்டுள்ளது. 

இயக்குனராய் வசந்தபாலன்:
என்றும் வசந்தபாலனின் திரைப்படங்கள் வாழ்க்கையை ஒட்டி தான் இருக்கும். அந்த வகையில் இந்த நூற்றாண்டில் இருக்கும் நமக்கு போன நூற்றாண்டின் பொக்கிஷத்தை இன்றைய காலம் ரசிப்பதற்காக எடுத்தமைக்கு பாராட்டுகள்.  இன்னும் நாம் இழந்த பல காவியத்தலைவர்களை உருவாக்கி தர வேண்டுகிறோம்.

மீண்டும் காவியத்தலைவன் யாரென்று கேள்வி எழுந்துள்ளது காரணம் இங்கே அவரவர் அவருடைய தொழிலில் மேலோங்கி இருக்கின்றனர் இசையில்,நடிப்பில்,எழுத்தில்,இயக்கத்தில்,திரைக்கதையில்,ஒளிப்பதிவில். ஆக அனைவரும் காவியத்தலைவர்களே. 

என்றும் அன்புடன்,
ரசல்