Monday, January 27, 2014

கோலி சோடா விமர்சனம்

கோலி சோடா பருகி இருக்கிறீர்களா?? இதோ திரையில் பசங்க படத்தின்  நாயகர்களின் இன்னொரு பரிமாணம். பசங்க படம் எவ்வளவு தூரம் பள்ளி பருவம் மற்றும் பக்கத்து வீட்டு கதையை பார்ப்பது போல் இருந்ததோ, இதுவும் அப்படிப்பட்ட படம் தான்.



எனக்கு புரிந்தமட்டில் பாண்டியராஜின் மரினா கதைகளம் ஏற்படுத்தாத உணர்வை, இங்கே பாண்டியராஜின் வசன உதவியோடு விஜய் மில்டன் தன் திரைக்கதை ஆளுமையாலும் கேமரா கோணங்களாலும் ஏற்படுத்தி இருக்கிறார்.

கதை அனாதைகளின் வாழ்க்கையில் பயணிக்கிறது ஆனால் மாஸ் படம் அளவிற்கு நம் பசங்க வளர்ந்து விட்டது பார்க்க முடிந்தது. பல இடங்கள் சபாஷ் சொல்லும் அளவுக்கு வார்த்தையாலும் காட்சியமைப்பாலும் கட்டி போடுவது மறுக்க முடியாத உண்மை. 

படத்தில் பிண்ணனி இசையும் பாடல்களும் முழுமையாய் ஒட்டா விட்டாலும் கதைகளத்தை விரட்டி செல்வதில் சீலின் மற்றும் அருணகிரியின் பங்கு மிகவும் உள்ளது. 

அந்தோனியின் எடிட்டிங் எப்பொழுதும் போல் இருந்தது குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இடைவேளைக்கு முன் வரும் அடிதடி காட்சி மிரட்டல் அடி.

இங்கே இன்னும் இரண்டு பேர் பற்றி கூற வில்லை நன்றாக இருக்காது, கதையில் வரும் இரண்டு கதாநாயகி பிள்ளைகள் சின்னபொண்ணுங்க அப்படியும் சொல்லலாம். அவர்களில் ஒருவர் சிறந்த நடிப்பு மற்றொருவர் சிறந்த கதாநாயகி.மற்ற அனைவருக்கும் பங்கிட்ட வேலை அதிலும் வில்லன்கள், ஆச்சி, இமான் அண்ணாச்சி அவர்களின் பங்கு மிகை.

மொத்தத்தில் கோலி சோடா உடைக்கும் போது வரும் சத்தம் தந்த உணர்வோடு உள்ளே பானமும் அருமை.

அன்புடன்,
ரசல்

Saturday, November 16, 2013

பிஸ்ஸா 2 வில்லா - Mystical Thriller



வரைமுறைகளை கடக்கும் இன்னொரு திகில் பரிமாணம். சூனியங்களின் எதிர்மறை விளக்கம் தான் வில்லா. திகிலை எதிர்பார்த்து வருபவர்களுக்கு ஆச்சரியம் மட்டுமே மிஞ்சுகிறது பிஸ்ஸா என்ற தலைப்பின் தலைப்பாய் போனதால்.

யாரிந்த தீபன்?
நாளைய இயக்குனர் இறுதி போட்டியாளர்களில் ஒருவர். அந்த தகுதி தான் இப்பொழுது தமிழ் திரையுலகை மிகவும் குறைவான பட்ஜெட்டில் அதிகம் வசூலிக்கிறது. தீபனின் அமுதா குறும்படம் ஒன்று போதும் திகிலுக்கு மறுபெயர் மனதில் எழும் அச்சம் தான் என்பது புரியும்.

வில்லாவில் என்ன இருக்கிறது?
நம் முன்னோர்கள் வரையறுத்த வாஸ்துவின் விளக்கம் தான் வில்லா. நாமே நமக்குன்னு ஏற்படுத்தி கொள்ளும் தினம் செய்யும் சில பழக்கங்கள் ஏன்? சும்மா இப்படி பண்ணா நல்லது நடக்கும் நினைக்கிறது அது தான் நாம் ஏற்படுத்தி கொள்ளும் பாசிடிவ் சக்தி. இங்க அதை தான் 1மணிநேரம் 42நிமிஷம் நெகடிவ் சக்தியை எப்படி பாசிடிவ் ஆக காட்ட முடியுமோ அப்படி திரைபடுத்தி இருக்கிறார் தீபன். படம் ஆரம்பித்து வில்லாவை காட்டும் வரை மக்கள் சோம்பல் முறிக்க நேரம் கொடுத்து விட்டு, படம்  ஆரம்பிக்கும் வேகம் படம் முடியும் போது தான் சில நேரம் மூச்சு விட தவறியதை உணர முடிகிறது ஏனென்றால் திகிலால் அல்ல அதில் இருக்கும் மர்மங்கள் நாம் ஓட்டி பார்க்கும் போது. 

வில்லாவும் மென்மையான இசையும் மிரட்டல் ஒலிகளும்:
காணும் ஞானம் பாடல் பயத்திற்கும் ஞாபகத்திற்க்கும் பயன் படுத்த பட்டிருக்கு. இப்பவும் headset இல் கேக்கும் போது ஏதோ ஒன்று நினைக்க தோனுகிறது அதுவே காட்சியாய் வரும் போது திகிலுக்கு புது அர்த்தத்தை தருகிறது. ஒலி அலை அதிர்வை உணர வைத்த காட்சி இப்பொழுதும் கேட்கிறது. அப்படி இசையும் ஒலியும் விளையாடியவாறு கொடுத்த சந்தோஷ்க்கும் சங்கருக்கும் நன்றியும் பாராட்டும்.

வில்லாவும் கலையும் ஒளிப்பதிவும்:
ஒரு பழங்கால வில்லா அதில் பல ஓவியங்கள் மற்றும் கலையாற்றல் மிக்க பொருட்கள் உண்மையில் கலை இயக்குனர் மாயன்  அதிக மெனக்கெட்டு இருக்க வேண்டும். அதனை நம் கண்களுக்கு விருந்தாக்கிய ஒளிப்பதிவாளரும்(தீபக்) சளைத்தவர் அல்ல. 

நடிகர்கள் வில்லாவினில்:
அசோக் எழுத்தாளருக்கான விறைப்பும் முறைப்பும்.சஞ்சிதா இளமையும் எதிர்பார்ப்பும். மற்றும் சில நடிகர்கள் விரல் விட்டு எண்ணிவிடலாம். புதுமுகமாய் தெரிவதால் தான் படத்திற்கு இவர்களால் பலம் கூடுகிறது.

டைரக்டர் டச்:
நாசர்: you cannot change anything and everything!
டைரக்டர்: ஆமா உண்மை தான்! ஆனா திகில் படத்துக்கான வரைமுறைகளை மாத்த முடியும்.

இந்த படம் வேற மாறி பிஸ்ஸா முதல் பகுதி திகில் படம் இது மாயை(mystical thriller) ஆனா அத பத்தி ரொம்ப நேரம் யோசிக்க வைக்கும்.

மூன்றாம் பாகமும் எடுக்கப்படலாம்!

என்றும் அன்புடன்,
ரசல்

Saturday, November 9, 2013

பாண்டியநாடு - பொழுதுபோக்கு விமர்சனம்




சுசீந்தரன் மீண்டும் ஒரு "நான் மகான் அல்ல"  பாணியில் மதுரையை தழுவி எடுக்க பட்ட குடும்பம் + அதிரடி படம். commercial படங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்த படமும் உதாரணம். நம் தமிழ்நாட்டில் கலை ரசிகர்களை விட timepass க்காக மட்டும் படம் பார்பவர்கள் அதிகம் ஏனென்றால் உழைப்பாளர்கள் தான் நாம் பெரும்பாலும். சோம்பலை முறிக்க படம் பார்க்கும் போது படங்கள் கலையை நோக்கி போகும் போது மேலும் சோம்பல் தரும் சூழ்நிலை, படத்தின் காரணமாய் இல்லை படம் பார்பவரின் மனநிலையால்.

இங்கே அப்பா,அம்மா,அண்ணன்,அண்ணி,குழந்தைகள் என  குடும்பத்திற்குள் நடக்கும் இயல்பான தினமும் பார்க்கும் காட்சிகள். ஒரு வில்லன் எப்படி அவனே உருவாகிறான் ஆக்ரோஷமாய் ஆட்டி படைக்கும் கதாபாத்திரம். ஒரு காதல் அதுவும் கண்டதும் காதல் அதை வளர்க்க கதாநாயகனின் முயற்சிகள். நாலு பாட்டு கேக்கரமாரி.நட்புடன் சில நண்பர்கள். வில்லனை பழிவாங்க போராடும் பயந்தாங்கோலி கதாநாயகனும் வயதான தந்தையும். இவை எல்லாவற்றையும் திரைகதையாய் உருவாக்கி சீட்டின் நுனியில் அடுத்து என்ன என யோசிப்பதற்க்குள் சுவாரசியம் வைத்த விதம் தான் இந்த படத்தை வெற்றியாக்கி உள்ளது.

விஷாலுக்கு ரொம்ப நாளுக்கு பிறகு ஒரு வெற்றி இதில் தொடையை தட்டவில்லை,வரேண்டா,போறேண்டா, மதுரைகாரண்டா  போன்ற வசனங்கள் இல்லாமல் ஒரு நடுத்தர வாலிபன் சமுதாயத்தில் எதற்கும் சண்டை போடாமல் கண்களில் பயத்தை வில்லனை காணும் போதும் உயிரை காப்பாற்றி கொள்ள ஓடும் கதாபாத்திரம். பாரதிராஜா அயுதயெழுத்தில் நடித்திருந்த பொழுதும் பாதிநேரம் குரல் கேக்காமல் போனது ஆனால் இங்கே அந்த குறையை போக்கிவிட்டார். அடடா அவர் எத்தனை பேருக்கு நடிக்க கற்றுகொடுதிருப்பார் அவரிடம் இப்படி ஒரு கதாபாத்திரம் பல நாள் பேசப்படலாம். இமான் பிண்ணனி இசை படத்திற்கு மேலும் சுவாரசியம் கூட்டுகிறது.

நான் படம் பார்க்கும் போது மக்கள் எந்த அளவுக்கு ரசித்திருந்தால் விஷால் நண்பனை கொன்றவனை அடிக்கும் முதல் அடிக்கு கைதட்டி கூச்சளிட்டிருப்பார்கள் என்று ஆச்சரியமாய் இருந்தது. கடைசியாக பாரதிராஜா விஷாலின் கரங்களை பற்றிக்கொண்டு பேசாமல் உணர்வுபூர்வமாய் நடிக்கும் நடிப்பு அது சுசீந்திரன் கைகளை பற்றிக்கொண்டு இந்த தலைமுறை உங்களை போன்ற இயக்குனர்கள் கையில் தான் உள்ளது என்பதை போல் இருந்தது.

ரொம்ப நாள் பிறகு நல்ல ஒரு பொழுதுபோக்கு படம் பார்த்த திருப்தி.

என்றும் அன்புடன்,
ரசல் 

Friday, October 4, 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்



தோரணை:
காட்டில் வாழும் மிருகங்கள் கரடி,ஓநாய்,ஆடு,புலி இவை எல்லாமும் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய போராடும் கதை. ஆனால் ஏன் காட்டின் ராஜா சிங்கம் வரவில்லை என்ற கேள்விக்கு? தெரிந்த விடை இசையின் ராஜா சிங்கமாய் தன் கர்ஜிக்கும் இசையில் மொத்த படத்தின் ஓட்டமும் நிறைவு பெறுகிறது. இளையராஜா இசையின் ராஜா என்பதை இன்றும் பூர்த்தி செய்கிறார்,அதை மிஷ்கின் இங்கே பின்னணி இசையென குறிபிடாமல் முன்னணி இசை கோர்ப்பு இளையராஜா என படத்தின் பெயருக்கு முன் போட்டவிதமே படத்திற்கு தோரணை கட்டி அழகு சேர்தலாயிற்று.

ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் இசை கோர்வையும்:
படத்தில் மொத்தம் மூன்று அல்ல நான்கு பதிவுகள் பகலில் வந்திருக்கலாம் மற்று முழு படமும் இரவில் அரங்கேறுகிறது ஆக மின்மினி பூச்சிகளின் சத்தம் ஆங்கங்கே புற்களும் மரங்களும் அதிகம் நிறைந்த இடத்தில் வந்து போவது எவ்வளவு கூர்மையாய் படத்தொகுப்பும் இசை ஒலியும் ஒன்றி போகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு.

மின்மினி பூச்சியை விட அழகானது ஓசையே இல்லாமல் சில இடங்கள் வந்து போவது. அதனினும் அழகானது கண்ணீர்,வேதனை,தேடல்,ஆச்சர்யம்,வலி,பதட்டம் இவை போல் பல சூழ்நிலைகளை படத்தொகுப்பும் இசையும் ஒவ்வொருவரையும் சீட்டின் நுனியில் உட்காரவைக்கிறது.

இந்த படம் மூலம் ஒளிப்பதிவாளர் பாலாஜி வீ  ரங்கா புத்தம்புது வண்ணம் திரைப்படத்திற்கு ஊட்டுகிறார்.

கதாபாத்திரமும் கதையும்:
மிஷ்கின் படத்திற்கே உரிய வெற்றி வியுகங்கள் ஆங்கங்கே தெளித்துவிட்டு. படத்தில் இருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் வாழ்திருக்கின்றனர். அதில் சிலர் சில நிமிடமே வந்தாலும் பேசவைகின்றனர். அப்படி பட்டர்வர்கள் சிலரை குறிப்பிடாமல் இருந்தால் நன்றாக இருக்காது ஆனால் கதையும் முழுதாய் விளக்க முடியாது. அவைகளுள் பல..

காவல்துறை கதாபத்திரங்கள் 
நல்ல போலீஸ்,கெட்ட போலீஸ்,பச்சோந்தி போலீஸ் மற்றும் உயிரைகொடுக்கும் போலீஸ்.

மக்கள் கதாபாத்திரங்கள்
பைத்தியக்காரன்,HOD மருத்துவர்,கண் தெரியா அம்மா அப்பா மகள் குடும்பம்,திருநங்கை,கண் தெரியாதவர்களின் பாடல் குழு,வாட்ச்மேன்,ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் பணத்திற்காக விசுவாசத்திற்காக உயிர் பறிக்கும் கொலைகாரர்கள்.

முக்கிய கதாபாத்திரங்கள்
மிஷ்கின் ஓநாயாய் ஸ்ரீ ஆட்டுகுட்டியாய் 

இப்படி மேலே குறிபிட்டவர்கள் அனைவரும் இரு இரவில் பங்கேற்கும் கதை துளி நேரம் தொய்வில்லாமல் நகர்கிறது. 

சண்டைக்காட்சியும் மிஷ்கினும்:
ஒவ்வொரு சண்டைக்காட்சியும் அவ்வளவு நேர்த்தி. மிஷ்கின் உண்மையிலே சண்டைபோடுவதை போல் சிலிர்க்க வைக்கிறார் குறிப்பாக கிளைமாக்ஸ்ல். அதிகம் வன்முறை இருந்தாலும் அவையாவும் திணிக்க பட்டவை அல்ல கதையின் ஓட்டத்திற்கு தேவைபடுபவை. 

நானும் ஓநாயும் ஆட்டுக்குட்டியும்:
திரைப்படம் எந்த ஒரு எதிர்பார்ப்பும் கூட்டமல் வெளியிட்ட போதே எனக்குள் இருக்கும் ரசிகன் திரை அரங்கம் தேட ஆரம்பித்து விட்டான். கிடைத்தது எங்கே என்று ஆனால் நல்ல திரைப்படங்கள் பெரிய திரைஅரங்கில் வெளியிட யோசிக்கும் போது பெங்களூரில் என் குடியிருப்பு அருகாமையில் BGRADE படங்களை திரையிடும் திரைஅரங்கில் வெளியானது.ஒரு பக்கம் மனம் வருந்தினாலும் படத்தை பார்த்து முடித்தவுடன் அந்த திரைஅரங்கின் ஊழியரிடம் நன்றி கூறி வந்தேன். இங்கே கலைதாகம் தீர ஆட்டுகுட்டியாய் என்னோடு வந்த நட்பு ஆடுகளையும் இந்த ஓநாய்க்கு(மிஷ்கின்) இரையாக்கி வந்தேன் மகிழ்ச்சியுடன்.

கண்டிப்பாக கூறுவேன் இது 100 வருட சினிமாவிற்கு இந்த படம் மேலும் ஒரு அலங்கரிப்பு.


என்றும் அன்புடன்,
ரசல் 

Saturday, August 31, 2013

கவிதை நடையில் "தங்கமீன்கள்"



கவிதை நடையில்  "தங்கமீன்கள்"


மகிழ்ச்சி:

இரண்டாம் தாயாய் செல்லம்மாவை தோளில் சுமந்த 
கல்யாணியின் கபடமில்லா தெளிவுரையை 
வெள்ளித்திரையில் கண்டேன்!

பாத்திரபடைப்பு:

கல்யாணி என அழைக்கபடும் தந்தைக்கும் 
வடிவு என்ற தாயுக்கும் சிறு வயது காதலில் 
பிறந்த செல்லம்மா கதாநாயகியாய் 
கதையில் வரும் உறவுகள் 
கதாநாயகர்களாய்!

தந்தைக்கும் மகளுக்கும் உள்ள  பாசத்தை மட்டும் கூறவில்லை
ஒரு ஆண்மகனின் 
தந்தை,தாய்,மாணவி,அண்ணன் மற்றும் நண்பன் 
என்ற உறவுகளோடு தன்னையே வருத்திக்கொள்ளும் 
வாழ்வாதாரத்தின் போராட்டம்!

செல்லம்மாவும் கல்யாணியும்:

கிளிபிள்ளையின் கேள்விகளுக்கு 
அன்பாய் அரவணைத்து கூறினால் 
அப்பிள்ளையும் அறிவாளிதான்!

எது என்ன விலை என்று தெரியும் போது 
அக்குழந்தைகள் தந்தை சுமை அறிந்து 
கேட்பதில்லை!

ஆனால் அது தெரியும் வரை முடிந்தவரை 
முடியாது என்ற வார்த்தையை கூற 
வருத்தப்படும் கல்யாணி!

தந்தை கூறினால் அது உண்மையாக தான் இருக்கும் 
அவர்போல் கரம் பிடித்து கூட்டிச்செல்லும் ஒருவர் வந்தால் 
அவர் கூறுவதையும் கேட்டுக்கொள்ளும் செல்லம்மா!

அதுவரை ஒரு கேள்விக்கு பல பதில்கள் உண்டென
கூறுவதில் கெட்டிக்காரி அவள்!
அதில் அர்த்தம் புரிந்தவன் கைதட்டுகிறான்!

இசையும் ஒளிப்பதிவும்:

ஒளி சேர்க்கையில் ஒலி விளையாடியது 
கரடு முரடான பாதையின் காட்சியில் பசுமை 
இசை சேர்ந்தபின் அதன் செழுமையில் 
கண்களும் செவிகளும் அதன் காட்சிக்குள்ளயே 
சஞ்சரிக்கும்!

பிரிவும் கண்ணீரும் ஏற்படுத்தும் வலியை 
இசை தாங்கி செல்கிறது கூடவே மனமும் 
இறுகியது!

எழுத்தும் இயக்கமும்:

தமிழ் கல்வியும் அதன் நிலைமையும் தான் கற்றது தமிழ்! 
தனியார் பள்ளியும் அதனால் தனியாய் போன தந்தையும் தான் 
தங்கமீன்கள்!

பணமும் மனமும் ஒன்று சேரும் போது  வாழ்வியலில் 
சந்தோஷத்தை இழக்கும் என 
கவிதை நடையில் தன் கதை நெறியில் 
விளக்கபாடம் எடுத்ததற்கு 
கண்களில் நீர் ததும்ப 
நன்றிகள்!

இதற்குமேல் இந்த உறவை பற்றி  பதிவு செய்யப்பட்டால் 
பணம் கொடுத்து படம் பார்க்கும் உங்களை நான் வழிநடத்தி 
சென்றது போல் ஆகிவிடும்!


பலகோடி பாராட்டுகள் கேக்கட்டும் இந்த 
உண்மை படைப்பாளியின் உன்னத படைப்பிற்காக!

என்றும் அன்புடன்,
ரசல் 

Tuesday, August 20, 2013

ஆதலால் காதல் செய்வீர்!

ஆதலால் காதல் செய்வீர்!



ராஜபாட்டை தந்த தோல்வி,அதன் பின்னர் மக்களிடம் கூறிய மன்னிப்பு,ஒரு உண்மை படைப்பாளியின் சமுகத்தின் மீதுள்ள  கோவம், இவை யாவும்  படத்தை பார்த்தவர்களை கன்னத்தில் அறைந்த முயற்சி தான் ஆதலால் காதல் செய்வீர்.

காதலை வரையறை இல்லாமல் பார்த்துவிட்ட நமக்கு இந்த படம் ஒரு முழுமுதல் தைரியமான படைப்பு. இந்த கால இலங்காதலை எந்த ஒரு சமாதானமும் இல்லாமல் திரையில் சிறு கவர்ச்சியான காட்சியமைப்பு கூட இல்லாமல் காதலின் காமத்தை திரையாக்கிய விதம் தான் படத்தின் முதல் வெற்றி.

சுசிந்தரன் தன்னை எப்படி பட்ட படைப்பாளி என்று இது வரை வந்த படங்களை காட்டிலும் இந்த படத்தின் உழைப்பு தான் மேலோங்கி இருக்கிறது. படம் பார்க்க வருபவர்கள் முதலில் இந்த கால இளைஞர்கள், அவர்களுக்கு மிக நீண்ட படங்கள் கொடுக்க தேவையில்லை ஒன்றரை மணி நேரம் போதும் என்று முன் பாதி முக்கால் பின் பாதி முக்கால் மணி நேரம் தான் படம். ஆனால் பகிரப்பட்ட ஒன்று அந்த இளைஞர்களை பற்றி தான். கூடவே அவர்களின் முதிராத காதலை அவர்கள் பெற்றோர்கள் எப்படி எடுத்து கொள்வர் அதன் மூலம் விளையும் பின்விளைவு இவை யாவும் அடுத்து அடுத்து காட்சிகளாய் அடுக்கி கடைசியில் கண்களையும் உங்கள் மனதையும் இறுக்கி எழ முடியாமல் திரைஅரங்கை விட்டு வெளியே போகும் வழி தெரிந்தும் விடை தெரியா கேள்விகளுக்கு விடை தேடி செல்வீர்.

ஐந்து நிமிட பாடல் தான் இந்த படத்தின் கிளைமாக்ஸ். அந்த பாடல் ஏற்படுத்தும் பரிதாபம் எழுத தேவை இல்லை உணர்ந்தாலே போதும். கடைசியாய் இந்த படத்திற்கு  ஏன் "ஆதலால் காதல் செய்வீர்" என்ற பெயர் என்பதை சுசிந்தரன் தான் கூற வேண்டும் ஏனென்றால் எனக்கு தோன்றியது  "காதல் செய்வீர்? ஆதலால்..."  

என்றும் அன்புடன்,
ரசல்

Saturday, July 20, 2013

மரியான் - சாவே இல்லாதவன்!

பரத் பாலா:

தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதிகளை பயன்படுத்த தேவையில்லை எளிமையான கதையை கூட கதாபாத்திரங்கள் வென்று விடுவர் என்று மரியான் படம் மூலம் பரத்பாலா விவரிக்கிறார். அப்படியென்ன விதிகளை பயன்படுத்தவில்லை என்றால் இப்போதெல்லாம் படத்திற்கு பெயர் போடுவதற்க்கே முப்போது நொடி கிராபிக் காட்சிகள் தேவை படுகிறது இங்கே ஒரே காட்சியில் தங்க நிறத்தில் மரியான் என்று பெயர் போடப்படுகிறது. படத்திற்கு ஏன் இந்த பெயர் அதை எடுத்த எடுப்பிலே மரியான் குறிப்பிடுகிறார்.

மரியான் - சாவே இல்லாதவன்!

இப்படி கதையின் ஆரம்பம் என்று மட்டும் இல்லாமல் எதற்குமே எதார்த்தத்தை மிஞ்சாத வகையில் படம் நகர்கிறது. கொம்பன் சுறா பாடல் சினிமாதனத்தை காட்டினாலும் மற்ற இடங்களில் இது வெறும் நிகழ்வுகளின் ஒருங்கிணைப்பாக தான் நான் பார்க்கிறேன். உதாரணம் சிறுத்தையை முன்னோட்டத்தில் பார்த்துவிட்டு சண்டை காட்சியை எதிர் பார்த்து வந்தால் அது நம் முந்தைய படங்களினால் பழக்கப்பட்டது தான் காரணம். சிறுத்தை கம்பீரமாய் காட்சியளிக்க இங்கே அது கானல் நீரை போன்று கதாநாயகனுக்கு பயத்தை தருகிறது. தன் விளம்பர படங்கள் மற்றும் ஆல்பங்கள் கொடுத்த தைரியத்தில் நானும் கதை சொல்வேன் என்று நிருபித்திருக்கிறார். அடுத்த முயற்சிகள் அனைவரையும் கவரும் என்பதில் எனக்கேதும் ஐயமில்லை.

தனுஷ்:

ஹிந்தியில் இப்போது தான் அனைவரும் அனாசிய நடிப்பு என்று பாராட்டுகள் குவிந்தது. நான் சவால் இடுகிறேன் தனுஷின் உண்மையான நடிப்பு திறமை எதுவென்று இந்த படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். முதல் பாதியில் சுருக்கிய முகம் கடு கடு வென முரட்டு தோல் போர்த்தி கடலில் வேட்டையாடும் மரியான் பிற்பாதியில் காதலுக்காக உயிருக்காக கடலுக்காக உயிர் போய் உயிர் கொடுத்திருக்கும் தனுஷின் நடிப்பை பாராட்ட வாழ்த்துரைகள் தேவையில்லை மெய்சிலிர்க்கும் அக்கணங்களே போதும். 

படத்தின் முதல் பாதியில் நண்பனை இழந்து காதலியை அடித்து விட்டு மீண்டும் காதலியிடம் நான் வேற யார்கிட்ட காட்டுவேன் என்று முரட்டு கோபத்தையும் பொய் கோபத்தையும் காட்டும் தனுஷ் சபாஷ் என்று நினைக்கையில். இரண்டாம் பாதியில் நண்பனுக்கு காற்றில் வெறும் தரையில் தலை வாழை இலை போட்டு, மீன், மிளகு சோறு பரிமாறி, கள் குடித்து, பீடி பிடிக்கும் இடத்தில் வார்த்தைகள் இல்லை சில நொடிகள் திகைத்தே நின்றேன். இவ்வருடம் இவ்வளவு நடிப்பில் இது வரை படம் வரவில்லை இன்னும் வராத பட்சத்தில் தனுஷின் வீட்டில் இன்னும் ஒரு தேசிய விருது நிச்சையம்.

பார்வதி:

பூவில் பார்த்த பார்வதி இவள் இல்லை. இவள் பனிமலர் வாடிய பூக்களை கண்ட போதெல்லாம் வாடினேன் இங்கே இந்த பனிமலரின் காதல் காதலனுக்காக உணர்வாய் உறைந்து கிடக்கும் நடிப்புதான் அடுத்த பலம். வெறும் கண்ணீர் விட்டு கதறல் இல்லை நடிப்பில் உச்சரிப்பில் கண்களில் உள்ளது நடிப்பு.

இதுவரை தமிழ் சினிமாவில் வந்த விடைபெறும் காட்சி இங்கே ஒரு தொலைபேசி அழைப்பில் இன்னும் பலவருடங்கள் நினைவில் இருக்கும். பனி... மணி.. எல்லாம் முடிஞ்சு போச்சு... தனுஷின் கலங்கடிக்கும் நடிப்புக்கு நிகராய் பார்வதியின் நடிப்பு. சற்று கலங்கிய கண்களில் தான் அதன் பின் வந்த காட்சிகளை பார்த்தேன். இதில் லாஜிக் அத்துமீறல்கள் தென்பட்டாலும் உயிர் போகும் முன் காதலியிடம் பேச நினைக்கும் ஆண்கள் எத்தனை அதில் ஆபத்தில் இருக்கும் காதலன் கண்டிப்பாய் அழைப்பான் என காதலிகள் எத்தனை? இந்த கோணத்தில் பார்க்கும் போது அந்த காட்சி என்னை மிகவும் ஈர்த்தது.


இசைப்புயல் மற்றும் ஒளிபதிவாளர் மார்க் கோநிக்ஸ்:

பாடல்களில் "இன்னும் கொஞ்ச நேரம்" "நேற்று அவள் இருந்தால்" "எங்க போன ராசா" இரவில் காதருகே மெல்லிய இசையில் கேட்டு பழகிய எனக்கு ஒளிபதிவாளர் எடுத்திருக்கும் பல காட்சிகள் அசைபோட்டதாய் தெரிந்தாலும், காரணம் அவரில்லையே அவருக்கு பாடல் காட்சிகள் எடுப்பது புதிது என்பதால். வெள்ளைகாரனை பாடல் காட்சி எடுக்க வைத்தது நம் தவறு. ஆனால் ஒளிபதிவாளர் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் உணர்ச்சியை படம் முழுக்க காட்சி படுத்திய விதம்தான் தனுஷ் பார்வதி நடிப்பை பாராட்ட தூண்டியது. அதற்கும் முக்கிய காரணம் இசைப்புயலின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை. 

படம் முழுக்க லைவ் ஆடியோ ரெகார்டிங் செய்ததால் சுற்றி அடிக்கும் கடலின் அலையும் கேட்கிறது சூறாவளி காற்றின் வீரியமும் தெரிகிறது. மொத்தத்தில் இசையும் ஒளிப்பதிவும் ஒருகிணைந்த படமென்றே நினைக்கிறேன்.


சில நெருடல்கள்:
முன் கூறியது போல் இயக்குனருக்கு முதல் முயற்சியாய் இருந்தாலும் சூடான் தீவிரவாதிகள் பணத்திற்காக மட்டும் கொள்ளை அடிக்கிறார்கள் என்று ஒரே காட்சியில் கூறும் போதே உங்கள் கம்பெனி எங்கள் ஊர் எண்ணையை தான் எடுக்கிறது என்பது போன்ற வசனங்களையும் தவிர்த்திருக்கலாம். ரெண்டு பாதியிலும் கதாபத்திர புரிதலுக்கு நேரம் ஒதுக்கியதால் இரண்டரை மணி நேர படம் மிகவும் நீளமாய் தெரிகிறது.

வாழ்த்துக்கள்:
பண்பட்ட நடிகராய் மாறி இருக்கும் தனுஷ் தமிழ் சினிமாவின் "நாளைய மரியான்"

என்றும் அன்புடன்,
ரசல்