Monday, March 4, 2024

#வேலன்

 உள்ளதொரு #வாழ்க்கை

நல்லதொரு நாளை
தேடி ஓடி தினமும்
வாடி ஒதுங்கும் நேரம்
துன்பம் மேலும் பெருகும்
இன்பம் தூரம் அகலும்
நம்பிக்கை விடும் நேரம்
தன்னம்பிக்கை தோல் கொடுக்கும்
நாளில்!
#வேலன் வருவான் தன்
வேலோடு!
வினைகள் எல்லாம் பொடிகள் ஆக்கி
நல்லவை எல்லாம் நம்மோடு மலர்ந்திடுமே.

Thursday, December 28, 2023

 CAPTAIN VIJAYAKANTH (RIP)


Saturday, January 7, 2023

யானை வரும் பின்னே!! மணியோசை வரும் முன்னே!!

 யானை வரும் பின்னே!! மணியோசை வரும் முன்னே! 


யானை வரும் பின்னே! மணியோசை வரும் முன்னே! இந்த  பழமொழியின் அர்த்தத்தை எங்க லட்சுமி யானை கிட்ட இருந்து தான் கத்துக்கிட்டேன். நான் வசித்த தெருவில் தான் லட்சுமி யானைக்கு இருப்பிடம். காலை என் தெருவின் வழியாக சென்றால்.. மாலை பக்கத்து தெருவின் வழியாக வருவாள். மணியோசை கேட்க ஆரம்பித்தவுடன் ஜன்னலை நோக்கி கால்கள் ஓடிவிடும். வீட்டில் வாழைப்பழம் இருந்தால் போதும் யானைக்கு வேண்டுமென வாங்கி தெருவுக்கு சென்று விடுவேன். எங்கள் தெருவில் இருக்கும் பல வயதினருக்கும் யானையை பார்ப்பது,அதற்கு உணவு  கொடுப்பது அதனிடம் ஆசீர்வாதம் வாங்குவது வழக்கம் பழக்கம்.

லட்சுமியின் கண்கள் நம்மை நன்றாக உற்று நோக்கும். சில சில கண் சிமிட்டல்கள் அவ்வப்போது தரும். பிளிறும் ஓசையும் ஆசையாய் கொஞ்சி பேசுவது போல தான் இருக்கும்.  காதுகள் படபடக்கும் பட்டாம்பூச்சி போல தான்.. ஆனால் அது மயிலிறகு விசிறி போல் மெதுவாக போய்  மெதுவாக வரும். அதன் உருவம் மற்ற ஊர் யானைகள் போல் இல்லாமல் உயரம் குறைவு. அதனால் தான் என்னவோ யாருக்கும் அவ்வளவு எளிதில் அவளை பார்த்தால் பயம் வருவதில்லை.  மாறாக அன்பும் புத்துணர்வும் பெருகி வரும் அவளை பார்த்தாலே. நடையை பற்றி சொல்ல வேண்டுமெனில் அவள் கால்கள் நடக்கும் நடையில் தான் அந்த கழுத்து ஆடி அந்த மணியின் ஓசை வரும் கேட்கவே ஒரு இளையராஜா இசைதான். 

நான் அந்த தெருவை விட்டு வேறு இடத்திற்கு மாறி சென்றாலும் மனமும் என் வண்டியும் அதன் இருப்பிடம் இருக்கும் தெரு வழியே தான் செல்லும். எவ்வளவு வேகமாக சென்றாலும் அதன் இருப்பிடம் கடந்து செல்லும் போது வண்டியை மெதுவாக செலுத்தி என் பார்வை அதன் கதவுகள் இடுக்கு வழியே லட்சுமி இருக்கிறதா இல்லை கோவிலுக்கு சென்று விட்டதா என்று பார்த்து விட்டு தான் செல்லும். அதன் இருப்பிடத்தில் மிக பெரிய பச்சை இரும்பு கதவு நடுவே பார்வையாளர்கள் பார்ப்பதற்கு இடுக்கு வழி இருக்கும். நிறைய நாள் ஒரு பேனர் போட்டு அந்த ஓட்டையையும் மூடி விடுவர் அவள் உணவு உண்ணவோ குளிக்கவோ இருக்கலாம்,அதை யாரும் பார்க்க கூடாது என்று. அவள் இருப்பிடத்திலேயே பார்க்கும்போது கூட அவளுக்கு மூட்டை மூட்டையாய் வெள்ளரிக்காய் மற்றும் பல உணவுகள் இருக்கும் இல்லை என்றால் லட்சுமி ஒரு தென்னங்கீற்றை சாப்பிட்டு கொண்டு இருக்கும். பல நாட்கள் தூரத்தில் அவள் வருவது ஏதாவது ஒரு தெருவில் தெரிந்தால் உடனே என் வண்டி அந்த திசை நோக்கி  திரும்பிவிடும். சிலர் கூறுவார்கள் ஏதாவது நல்ல காரியம் செல்லும் போது யானை வழியில் பார்த்தால் அந்த காரியம் சுபம் என்று. யானையே சுற்றி வந்த ஊர் என்பதால் தொட்ட காரியங்கள் சுபமாகும் ஊறாகவே புதுவை மாறியது. சில முக்கியமான பிற கோயில் திருவிழாவுக்கு லட்சுமி யானையை அழைத்து செல்வதுண்டு. அப்படி யானையை அழைத்து சென்ற திருவிழாவில் கூட சாமி எங்கள் லட்சுமி யானை தான். அதன் அன்றைய பராமரிப்பு சும்மா சொல்ல கூடாது தடபுடலாக தான் இருக்கும். பல நாள் பாகனை கண்டு பொறாமை கூட பட்டிருப்போம் எப்போதும் யானை கூடவே இருக்காங்களே என்ற ஏக்கத்தோடு ஒரு சிறுபிள்ளையை போல. பல பேர் தன் குழந்தைக்கு யானை காட்டுகிறேன் என தாங்களும் அதை பார்க்க செல்வார்கள். அப்படிதான் என் மகனுக்கும் மகளுக்கும்  காட்டிய முதல் யானை லட்சுமி. என் மனைவி ஒரு முறை அதன் அருகில் நின்ற போது தடவி கொடுக்கலாமா என்று கேட்பதற்குள் அதன் தும்பிக்கையை அவள் அருகே நீட்டியதால் அன்று முதல் அவளும் என்னை போலே யானை பற்றி கேட்டுக்கொண்டே இருப்பாள். அதன் மீது அன்பும் வளர்ந்து கொண்டு தான் சென்றது. ஊரில் உள்ள அனைத்து செல்போன்களிலும் அவளின் ஒரு புகைப்படம் இல்லாமல் இருந்ததில்லை. ஏன் சுற்றுலா வந்தவர்கள் கூட அதிக புகைப்படம் எடுத்த ஒரே யானை எங்கள் லட்சுமி அதனால் தான் என்னவோ...

அன்றைய தினம்..
மணி 6:40. நடைபயிற்சி முடித்து வழக்கம் போல பால் வாங்க சென்ற போது பால்கார அம்மா தான் கூறினார் லட்சுமி கீழே விழுந்து விட்டது பால் வாங்க வந்தவர்கள் சொன்னார்கள் என்று. நான் எனக்கு தெரியவில்லை சொல்லி விட்டு மனம் அது தங்கி இருக்கும் தெருவிற்கு செல்ல தூண்டியது. அங்கே சென்ற எனக்கு வந்த செய்தி லட்சுமி இறந்து விட்டது என்று. சிறு வயதில் இருந்து எனக்கு மட்டும் அல்ல ஊருக்கே தெரியும் அது எந்த பாதையில் செல்லும் என்று. அடுத்த தெருவிற்கு நுழைந்தவுடன் 20 பேர் கூட்டம் தெரிந்தது மனம் படபடக்க ஆரம்பித்து விட்டது. அருகே சென்று வண்டியை நிறுத்தி ஓடினேன் லட்சுமியின்  உடல் தெருவின் நடுவே இருக்க பலர் அதன் மார்பை அழுத்தி பார்த்து கொண்டிருந்தனர். பாகன் அழுகிறார்.. நான் அழுகிறேன்.. அருகில் இருப்பவர் அழுகிறார்.. வருபவர் எல்லாம் அழுகிறார்கள்... எங்கள் செல்ல லட்சுமி இறந்து விட்டது அது வலம் வரும் தெருவில் விழுந்து இறந்து விட்டது. தெய்வமே இப்படி போயிட்டியே என்ற வார்த்தை என்னை மீறி அதன் கால்களை தொடும் போது உதிர்த்தது. அதன் பின் பிள்ளைகளும் மனைவியும் அழைத்து வந்து பார்ப்பதற்க்குள் 20 100 200 என்று கூட்டம் கூடி கொண்டே சென்றது. பாகனின் கைகள் பிடித்து அழுது விட்டு வந்தேன். அன்று புதுவையே சோகம் முகம் பூண்டது.யானையின் இறுதி ஊர்வலமும் சிவ முழக்கம் போட்டு அகால மரணம் அடைந்த லட்சுமியின் உடலை அகண்ட நிலத்தில் புதைத்தார்கள். 

அவள் போய் நாட்கள் கடந்தாலும் இன்றும் நான் அவள் நினைவாக எழுதுகிறேன்

உயிரே இல்லை உடல் மட்டும் புதையிடத்தில் 
உன்னை தடவி பார்த்தவர்கள் எல்லாம் 
அன்று தழுவி பார்த்து அழுதார்கள் 
விட்டு போன இடம் கூட பூக்கள் பூக்கும் இடமாக மாறி போக
மறந்து மட்டும் செல்லாமல் 
என்றும் உன் நினைவாக அழுதும் அலைந்தும் திரிகிறோம்
மீண்டும் ஒரு யானை வேண்டும்! அது நீயே பிறந்து வரவேண்டும்!
வருடங்கள் ஆனாலும் பரவாயில்லை! 
உன்னை காண காத்திருப்போம் அந்த மணக்குள விநாயகர் சாட்சியாக!

இன்றும்
லட்சுமி இறந்த இடத்தையும் வாழ்ந்த இடத்தையும் வெற்றிடமாக இருந்தாலும் அதை கனத்த இதயத்துடன் கடந்து தினமும் நோக்கம் இருந்தாலும் நோக்கம் இல்லை என்றாலும் செல்கிறேன் அதே இடுக்கு வழியே நீ தெரிவாயா என்று பார்த்து விட்டு. நான் மட்டும் அல்ல என்னை போல பலர்.


-- 
Yours,
Rasal

Friday, April 1, 2022

ஊரடங்கி..ஊரடங்கி..

 ஊரடங்கி..ஊரடங்கி.. இரண்டு ஆண்டாக நல்லது! கெட்டது! உற்றார்! உறவினர்! நண்பர்களை கூட பார்க்காமல் கடந்து சென்ற காலம் இப்போது மாறிவிட்டது. பிப்ரவரி இரண்டாம் வாரம் முதல் மார்ச் முதல் வாரம் வரை தொடர் விழாக்களும் விசேஷங்களும் வந்து மனதினை புத்துணர்வாகியது.


நிகழ்வு  1:
அன்பு தம்பியாகவும் நண்பராகவும் இருந்த விக்னேஷ் திருமணம் காரைக்குடியில் இருந்து 20கிமீ தொலைவில் உள்ள கீழாநிலக்கோட்டையில் திருமணம் மற்றும் வரவேற்பு.கல்யாணமாம் கல்யாணம் தடபுடலா கல்யாணம் அற்புதமான உணவு மற்றும் பரிமாறும் அன்புள்ளம் கொண்டவர்கள். முதல் முறையாக பழக்கம் இல்லாத ரோடுகளில் கார் ஒட்டி சென்ற அனுபவமும் புதுமை.

நிகழ்வு 2:
அன்பு மகள் ஸ்பூர்த்திக்கு முதல் பிறந்தநாள் கொண்டாட்டம். சென்ற வருடம் புது மனை புகு விழாவை போல் அதிக உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இல்லாமல் கொண்டாடினாலும் அன்பும் மகிழ்ச்சியும் அது அளவிட முடியாது. 

நிகழ்வு 3:
விருதுநகர் சென்று குல தெய்வ வழிபாட்டில் மகள் ஸ்பூர்த்திக்கு காதுகுத்தும் மொட்டை அடித்தலும் ஒன்று சேர கிடா சோறும் இரண்டு வருடம் சந்திக்காமல் இருந்த உறவினர்கள் உரையாடல்கள் என ஏக போகமாய் இனிதே முடிவடைந்தது.

விருதுநகர் வந்து மாரியம்மன் தரிசனம், சித்தி சித்தப்பா அண்ணன் மதனி தம்பி மாமா பெரியம்மா அக்கா குழந்தைகள் என அனைவரையும் கண்டு உரையாடியதே உள்ளத்தில் புது சந்தோஷத்தையும் அன்பையும் துளிர செய்தது.

ரெண்டு வருடம் சுவைக்காத பண்டங்கள் அட டா ஒவ்வொன்றும் ஒரு ரகம். மகேஷ் பேக்கரி பிளம் கேக்கும் மில்க் ரோல், இருட்டு கடை அல்வா,சேவு காரம்.

எங்கும் இன்பமயம்...

ஆன்மீகம்

 மார்ச் மாதம் #ஆன்மீக மாதமாய் மாறியது. முதலில் இரண்டு வருடமாக வெளி ஊருக்கு செல்லாமல் இருந்து சிவராத்திரி அன்று எங்கள் #குராயூர் #திருவேட்டை #அய்யனார் குலதெய்வத்திற்க்கு அங்காளி பங்காளி கிடா வெட்டு சாமி கும்பிடும் அழைப்பு வந்தது. அதோடு என் மகளுக்கு காதுகுத்தி மொட்டை போட்டு கும்பிட்டு வந்தோம். #விருதுநகர் #மாரியம்மனையும் கும்பிட்டு வந்தோம் அந்த பயணத்தில். இடையில் மகள் நட்சத்திர பிறந்த நாளுக்கு #திருச்சி  #கருமண்டபம்  #ராஜராஜேஸ்வரி கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம் செய்தோம். 


காலை நடைப்பயிற்சியில் மயில்கள் பார்ப்பது வழக்கம் கடந்த ஒரு மாதமாக. அடுத்த சில நாட்களில்  #கடைசிவிவசாயி படமும் பார்த்தேன். சில நாட்கள் மனைவியையும் அழைத்து கொண்டு நடைப்பயிற்சிக்கு சென்றேன். அவர்களும் மயிலை ரசித்தார். மூன்று வருடமாக செல்லாத மனைவியின் குலதெய்வம் #புஞ்சைசங்கேதி #சப்பாணி #கருப்பு சாமி தரிசிக்க சென்றோம். இரண்டே நாளில் #பழனி போக முடிவெடுத்தோம். நேற்று #பழனி சென்று முருகனையும் #போகரையும் தரிசித்து வந்தோம். அழகென்ற சொல்லுக்கு #முருகா!

இன்று காலை மூன்று நான்கு ஆண்டுகளுக்கு பிறகு #கருடனை பார்தேன்....

தொடரும்!!

--
Yours,
Rasal

Wednesday, February 3, 2016

இறுதிச்சுற்று


ஒரு கதை எழுதப்படும் போதே அதன் கிளைமாக்ஸ் எல்லா விதமான கதையின் போக்கிற்கும் கதாபாத்திரங்களின் நிகழ்வுகளுக்கும் முடிவாய் கூறி நிறைவு படுத்தவேண்டும். அதுபோல் இந்த படத்தில் இருக்கும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் ஒரு குத்துச்சண்டை இறுதிச்சுற்று விடையளித்தால் எப்படி இருக்கும் அது இந்த திரைபடத்தின் வெற்றியே. அதனால் தான் தலைப்பும் இறுதிச்சுற்று என்று வைத்து விருந்து படைத்திருக்கிறார் சுதா கோங்கரா.



பெண்கள் குத்துச்சண்டை கதை என்பதால் மட்டுமல்லாமல் எல்லா விளையாட்டு துறையிலும் நடக்கும் உட்கட்ட உச்சகட்ட அரசியலை தோலுரித்து தான் காட்டுகிறது அதுவும் கதை நகரும் வேகத்திலயே. குத்துச்சண்டை தெரிந்த பெண்ணையே நடிகையாக்கியத்தில் இருந்தே இயக்குனரின் வெற்றி ஆரம்பித்து விட்டது. புதுமுக நடிகை ரித்திகா சிங்க் நடிப்பு பல படங்கள் நடித்தும் பலருக்கு வராத நடிப்பு. எந்த ஒரு இடத்திலும் மதி கதாபாத்திரத்தை விட்டு விலகவே இல்லை. சிறப்பான எதிர்காலம் இருக்கிறது நடிகைக்கு.

சந்தோஷ் நாராயணன் இசை பல இடங்களில் ஒரு ஹாலிவுட் தரத்தில் நடக்கும் பின்னணி இசையென ஒலித்தது. அதிலும் எய் சண்டைகாரா பாடல் இடையில் வரும் புல்லாங்குழல் ஓசை அல்ல இசை அதன் புல்லங்குழல் ஓட்டை வழியே வரும் இசையை ஸ்லோ மோஷனில் இசையே  வெளிவருவதாய் உணரமுடிகிறது. எந்த ஒரு பாடலும் கதையை தாண்டி செல்லவில்லை.

ஒரு திரைபடத்தில் எத்தனை துனைக்கதைகள் இருக்கவேண்டும் அவை எல்லாம் படத்தில் ஒன்றாகி இருந்ததால் தான் திரைக்கதை சிறப்பாக அமைந்துள்ளது. இதில் மாதவன் மற்றும் ராஜ்குமார் ஹிரானி உதவி திரைக்கதை எத்தனை  பலம் சேர்த்திருக்கவேண்டுமோ அனைத்தையும் செய்து முடிக்கிறது. உதாரணமாக தாய் தந்தை மகள்கள் கதை,ஜூனியர் கோச் கதை,ஹீரோ வில்லன் கதை,ஹீரோ முன் கதை,ஹீரோ ராதாரவிக் கதை, ஹீரோ கோச் கதை, ஹீரோ கெட்டவன் கதை இப்படி படம் முழுக்க குட்டி குட்டி கதைகள் எல்லாம் ஒன்று சேர்ந்தது தான் இந்த திரைப்படம்.

மாதவன் தோளில் சுமந்து இந்த படத்தை தந்தார் என்பதற்கு ஒரே ஒரு காட்சியில் தான் சட்டையை கழற்றி குத்துசண்டை செய்வது போல் வரும் ஆனால் அந்த காட்சிக்கான அழுத்தம் அதிகம். அதற்கே ரெண்டு வருடம் குத்துசண்டை பயின்று உடம்பை ஏற்றி வைத்திருக்கிறார். படம் முழுக்க ஒரு கோச் என்பதை கோவம் கண்ணீர் இறக்கம் விட்டுகொடுத்தல் போன்ற காட்சிகளை அனாசியமாக நடித்து மனதில் நிறைகிறார்.

படத்தில் முக்கியமான இடத்தில் மாஸ்டர் உங்களுக்கு inspiration யார் என்ற கேள்விக்கு ஜெங்கிஸ் கான் என்ற சாம்ராட்டை கூறுவார் மாதவன். அதற்க்கு அவர் குத்துச்சண்டை வீரர் இல்லையே என கேள்வி எழுப்புவர் அதற்க்கு மாதவன் இது புரிஞ்ச அன்னிக்கி நீ முழு நேர குத்துச்சண்டை வீரராக மாறிடுவ என்பார். அது புரிஞ்சா இந்த படமும் புரியும்.

இறுதிச்சுற்று முடிவின் நிறைவோடு,
ப.இரசல் 

Wednesday, December 30, 2015

பசங்க 2 - ஹைக்கூ

குழந்தைகள் படம் எடுக்க இப்போதைக்கு பாண்டியராஜ் தவிர்த்து யாரும் இல்லை. தமிழில் ஒரு தாரே சமீன் பர் இந்த பசங்க அதற்காக ரீமேக் என்று எடுத்துக்கொள்ள வேண்டாம். அந்த படத்துக்கும் இந்த படத்துக்கும் ஆயிரம் வித்தியாசங்களாவது உண்டு.பல இடங்களில் வரும் வசனங்கள் எதார்த்தமானது. சூர்யா - அமலா பால் நடிப்பும் இயல்பானது. ஆனால் மனதில் தோன்றியது சூர்யா-ஜோதிகா நடித்திருந்தால் எதார்த்தமான ஒரு ஜோடியாக இருந்திருக்கும்.

குழ்ந்தைகள் அற்புதமானவர்கள் அவர்களின் திரைப்படங்களும் சுவாரசியமானது அதை நாம் தான் ஆதரிக்க வேண்டும். மெல்லிய பொழுதுபோக்கு மற்றும் வலுவான கருத்து இதை விமர்சனமாய் எழுதுவதை விட பார்த்து புரிந்து கொள்வதே மேல். பாண்டியராஜ்க்கும் சூர்யாவுக்கும் 2015 ஆம் ஆண்டை இனிதே முடித்து வைத்ததற்கு நன்றி.

படம் பார்த்து விட்டு வெளியே வரும் போது சில சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் கண்ணீர் விட்டவாரே சென்றனர், அவர்கள் ஒரு கடவுளின் குழந்தைகள் ஆசிரமத்தில் இருந்து ஒரு தொண்டு நிறுவனத்தால் படத்திற்கு அழைத்து வரபட்டிருக்கின்றனர். படத்தின் உருக்கத்தின் இருந்த எங்களை நெகிழ்ச்சி அடைய செய்தது அந்த காட்சி. இது அனைவருக்குமான படம் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும்.

நன்றியுடன்,
ப.இரசல்